முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.வரதராஜன் மரணம்

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.11 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில முன்னாள் செயலாளரும், மாநிலக் குழு உறுப்பினருமான முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என். வரதராஜன் உடல் நல குறைவால் நேற்று காலை சென்னையில் காலமானார்.அவருக்கு வயது 81. கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நடந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பிய வரதராஜனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை மைலாப்ரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு ஜெகதாம்பாள் என்ற மனைவியும், கல்யாணசுந்தரம், பாரதி ஆகிய மகன்களும் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் பாளையம் அருகே உள்ள கம்பிளியம்பட்டியை செந்த ஊராகக் கெண்ட இவர் திண்டுக்கல்லில் உள்ள செளந்தராஜா மில்லில் தொழிலாளியாக பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார் இவர், அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உயர்ந்தார். 1967ம் ஆண்டு வேடசந்தூர் தெகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1977 மற்றும் 1980ம் ஆண்டுகளில் திண்டுக்கல் சட்டமன்றத் தெகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கிட்டத்தட்ட 50 வருட அரசியல் வாழ்வில் இருந்த வரதராஜனுக்கு சொந்தமாக சென்னையில் வீடு கூட கிடையாது. அவரது உடல் தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு கருணாநிதி, சங்கரய்யா, இந்திய கம்யூ. தலைவர்கள் ஞானதேசிகன் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி மரியாதை செலுத்தினர். என்.வரதராஜன் உடல்   திண்டுக்கல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இன்று மாலை உடல் தகனம் நடக்கிறது.

3 நாட்களுக்கு கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.வரதராஜன் மறைவுக்கு, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,  முன்னாள் மத்தியக்குழுவின் உறுப்பினரும், தமிழ் மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளருமான தோழர் என்.வரதராஜன் இன்று (நேற்று) காலை 11.30 மணியளவில் காலமானார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவருடைய உடல் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 4.30 மணிக்கு அவர் உடல் திண்டுக்கல்லுக்கு எடுத்துச் செல்லப்படும். நாளை (11.4.2012) இன்று  மாலை  03.00 மணிக்கு திண்டுக்கல்லில் அன்னாரது இறுதி நிகழ்ச்சி நடைபெறும். மறைந்த தோழர் என்.வரதராஜன் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய செங்கொடி தாழ்த்தி தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது. கட்சியினுடைய மாவட்டக்குழுக்களும், கிளைகளும் அனைத்து இடங்களிலும்  காலஞ்சென்ற தோழருக்கு மரியாதை செலுத்தும் வகையில் 3 நாட்களுக்கு கட்சி கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு தனது அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். 

என். வரதராஜன் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் : சென்னையில்  உடல் நலக் குறைவு காரணமாக காலமான முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என். வரதராஜன் மறைவிற்கு தமிழகத்தில் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், தோழர் வரதராஜன், மூன்று முறை தமிழக சட்ட பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராகவும் மத்தியக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். தனது வாழ்நாளில் பெரும் பகுதியை பொதுவுடமை லட்சியத்திற்காக அர்ப்பணித்த, அடக்குமுறைகள் பலவற்றை சந்தித்த தோழர் வரதராஜன் அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார். 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திண்டுக்கல்லில் நூற்பாலை தொழிலாளராக வாழ்க்கையைத் துவங்கிய வரதராஜன், பொதுவுடைமை கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து மக்களுக்காகவும், தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர். அவரது மறைவு இடதுசாரி இயக்கங்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று கூறியுள்ளார். பொதுவாழ்க்கையில் ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டுமே அதற்கு இலக்கமாகவும், முன்னுதாரணமாகவும் திகழ்ந்தவர் தோழர் என். வரதராஜன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக ராமதாஸ் கூறியுள்ளார். இதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று மாலை தனி வேன் மூலம் அவரது உடல் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. நாளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்