முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலத்தை அபகரித்த துரைமுருகன் தம்பி மீது நடவடிக்கை

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.11 - வீட்டுவசதி வாரிய நிலத்தை அபகரித்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தம்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வைத்தியலிங்கம் கூறினார். நேற்று சட்டப்பேரவையில் வீட்டுவசதி வாரிய மானியக் கோரிக்கை மீதான கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் வைத்தியலிங்கம் பேசியதாவது:- வீட்டுவசடி வாரிய பொன் விழா ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா மாற்று திறனாளிகள் நலன் காக்கும் விதமாக வீட்டுவசதி வாரிய வீடுகள், மனைகள் ஒதுக்குவதில் 3 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டுள்ளார். மேலும் பொன் விழா ஆண்டை முன்னிட்டு வாரியத்தின் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் சிறப்பு கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வாரிய ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு 91 தொழில்நுட்ப பணியாளர்களுக்கும், 175 தொழில்நுட்பம் சாரா பணியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

ரூ.34 கோடி செலவில் பழுதடைந்த வாரிய குடியிருப்புகளை புதுப்பித்து புனரமைக்கப்பட்டும் வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை வாரியத்திற்கு சொந்தமான வாடகை குடியிருப்புகளை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே என்பதை மாற்றி அரசு சாரா ஊழியர்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் ஊழியர்கள், மின்சார வாரியம் மற்றும் குடிநீர் வாரிய பணியாளர்களுக்கும் முதல்வரின் ஆணைக்கிணங்க ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த 10 மாத கால ஆட்சியில் சென்னையில் மட்டும் ரூ.111 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வாரியம் வசம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் ஒரு செண்ட் நிலம் கூட மீட்கப்படவில்லை. ஏனென்றால் இந்த ஆக்கிரமிப்பில் இருந்தவர்கள் தி.மு.க.வினர் அவரிகள் முதல்வரின் ஆணைக்கிணங்க மேலும் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

தி.மு.க ஆட்சிக்கு வரும்போது எல்லாம் வீட்டு வசதி வாரியம் ``கோபாலபுரம் வீட்டுவசதி வாரியமாக மாறிவிடும்''

நந்தனம், லோட்டஸ் காலனி, 3,481 சதுர அடி நிலத்தில் 666 சதுர அடி வீட்டை 12.2.2012 அன்று விற்பனை செய்து விற்பனை பத்திரம் வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு 5 கோடி ரூபாய். ரூ.1,48,70,200/​-யினை ஒரே தவணையில் செலுத்தியுள்ளார். இது 1961- சிட்டி இம்ப்ருமெண்ட் டிரஸ்ட் டால் கட்டப்பட்ட தனி வீடு. சட்டப்படி அரசு விருப்புரிமையே கிடையாது. சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனையினை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளர் ஏ.எல். ஆறுமுகம் மற்றும் அவரது மகன் ஏ.மகேஷ் ஆகிய இருவரும் வாரியத்திற்கு சொந்தமான 0.84 ஏக்கர்(16 கிரவுண்ட்) நிலத்தினை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.17 கோடிக்கு மேல் இருக்கும். இவர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

2008-ம் ஆண்டில், உயர் வருவாய் பிரிவு மனை எண்.1023,1024, 1025 ஆகியவற்றை அரசு விருப்புரிமையின் கீழ் முன்னாள் முதலமைச்சரின் பாதுகாவலர்களாக பணியாற்றிய சி. கணேசன், சி.வினோதகன் மற்றும் இன்னொரு பாதுகாவலர் பாண்டியனின் மனைவி மீனா என்பவர்களது பெயரில் முறையே 4438 சதுர அடி, 4500 சதுர அடி, 4438 சதுர அடி மனைகள்  முறையே ரூ.74,52,100/-ரூ.74, 13,100/-ரூ.75,28,500/- தொகைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூவரும் மனைக்கான தொகையை ஒரே நாளில் செலுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் விற்பனை பத்திரம் பெற்ற 18 நாட்களிலேயே வியாபார நோக்கில் வேறு நபர்களுக்கு விற்பனை செய்துவிட்டனர்.

 இதே போன்று காட்பாடி நகரமைப்பு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமாக வணிக நோக்கத்திற்காக உள்ள இடங்களை 34, 800 சதுரஅடி உள்ள காலி இடத்தினை 13.12.2007 அன்று நடத்தப்பட்ட ஏலத்தில் அமைச்சர் துரைமுருகன் மனைவி சாந்தகுமாரி பெயரில் 4,800 சதுரடிகள் அவரது மகன் கதிரானந்தன் பெயரில் 5,400 சதுரடியும் ஆக மொத்தம் 15,600 சதுரடியை ரூ.78.78 இலட்சத்திற்கு ஏலம் எடுத்தனர்.2008-ம் ஆண்டில் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து விட்டோம் என்று நினைத்து எதிர்காலத்தில் நடவடிக்கை வரும் என்று பயந்து சங்கத்திற்கு திருப்ப ஒப்படைப்பு செய்தனர். அப்போதே துரைமுருகன் தி.மு.க. ஆட்சி போய்விடுமோ என்றும் ஜெயலலிதா ஆட்சி வந்துவிடும் என்று உறுப்பினர் துரைமுருகனுக்கு முன்பே தெரிந்திருக்கும் போல் உள்ளது. இதேபோல் 24.1.2007 மற்றும் 13.2.2007 ஆகிய நாட்களில் நடத்தப்பட்ட ஏலத்தில் வணிக நோக்கத்திற்குண்டான இடத்தை முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் தம்பி துரைசிங்காரம் மற்றும் அவரது துணைவியார் முல்லைகொடி துரைசிங்காரம் ஆகியோர் 22,000 சதுர அடியை ரூ.114.06 இலட்சத்திற்கு ஏலம் எடுத்திருக்கிறார்கள். இதேபோன்று மேற்படி காலி மனைகளை முறைகேடாக விற்பனை செய்தது குறித்து சட்டப்பிரிவு 81-கீழ் விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் முறைகேடாக பெற்ற இடத்தை விசாரணைக்கு பயந்து ஒப்படைத்துவிட்டார். ஆனால் அவரது சகோதரரோ இதுவரை ஒப்படிக்கவில்லை. இது குறித்து விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். முறையே 6,000 சதுரடி மற்றும் 16.000 சதுரடி நிலத்தினை ரூ.28.26 இலட்சம் மற்றும் ரூ.85.80 இலட்சத்திற்கு யாரையும் ஏலம் கேட்கவிடாமல் மிக குறைந்த விலைக்கு ஏலம் எடுத்துள்ளார்கள்.

பின்னர் நடவடிக்கைக்கு பயந்து ஏலம் எடுத்த நிலத்தை சங்கத்திற்கு திரும்ப ஒப்படைக்கிறேன் என்று சொன்னவர்கள் திரும்ப நிலத்தை ஒப்படைப்பு செய்யவில்லை. கோயம்புத்தூர் மண்டலத்தில்  பிஎஸ்ஜி கூட்டுறவு வீடுகட்டும் சங்கம், குறிச்சி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், சக்தி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், கோத்தாரிமில் கூட்டுறவு சங்கம் போன்றவற்றில் நடைமுறைப்படுத்தாத வீட்டுமனை திட்டங்களை முன்பணம் என்ற பெயரில் தி.மு.க- வை சேர்ந்த எம்.பழனிச்சாமி எம்.என்.சுகுமார் மற்றும் சிலர் ரூ.8 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சட்டப்பிரிவு 81- ன் கீழ் விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றவுடன் திட்ட அனுமதி வழங்குதல் பல்வேறு சீரிதிருத்தங்களை அமலாக்கியுள்ளது. முதலில், அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை வகைப்படுத்தி, அலுவலகச் செயல்முறை ஆணை வெளியிட்டு அது அனைவரும் அறியும் வகையில், இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மிகப்பெரிய மாற்றமாக, திட்ட அனுமதியில் இரட்டை அடுக்குமுறை புகுத்தப்பட்டு, மனை ஒப்புதல், கட்டிட ஒப்புதல் என்று பிரிக்கப்பட்டு, விரைவாக திட்ட அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 வருடங்களுக்கு முன்னரே செயல்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க 3.2.2012 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது இவ்வாறு அமைச்சர் வைத்திலிங்கம்  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்