முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

29 லட்சம் ரூபாய் செலவில் சத்துணவு மையங்கள் சீரமைப்பு

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.12 - தமிழகத்தில் 16,075 குழந்தைகள் மையத்தின் பழுதுகளை சீரமைத்து உட்கட்டமைப்பு வசதிகளைமேம்படுத்த இவ்வாண்டு 85 கோடிய 29 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நடைபெறும் என்று சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் நேற்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளை அமைச்சர் பா.வளர்மதி தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2012- 2013-ம் நிதியாண்டின் வரவு- செலவு திட்ட மதிப்பீட்டில் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்திற்காக 1510 கோடியே 44 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் குழந்தைகள் மையத்தின் தரத்தினை மேம்படுத்தி நல்ல சூழலை உருவாக்கும் வகையில் மையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.  இதன்படி அரசு கட்டடங்களில் செயல்பட்டு வரும் 9873 மையங்களுக்கு 46  கோடியே 15 லட்ச ரூபாய் செலவில் சிறிய பழுதுகள் நீக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

இதேபோல 6202 குழந்தைகள் மையங்களில் 39 கோடியே 14 லட்ச ரூபாய் செலவில் பெரிய அளவிலான பழுதுகள் சரி செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 12ஆயிரத்து 34 கோடி ரூபாய் செலவில் 20,558 மையங்களில்  ஒரு மின் விசிறி, ஒரு குழல் விளக்கு பொருத்தி மின் மயமாக்கப்படும்.  20,240 மையங்களில் 36கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் குழந்தைகளுக்கு தக்கவாறு கழிப்பிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மட்டும் 16 லட்சத்து 42 ஆயிரத்து 497 மாற்றுத் திறனாளிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பற்றிய சரியான புள்ளி விவரங்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.  

இவ்வாறு அமைச்சர் பா.வளர்மதி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்