முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழர் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்: முதல்வர்

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.13 - பலகோடி தமிழர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே சித்தரை முதல்நாள் தமிழ்புத்தாண்டாக மாற்றப்பட்டது என்றும், இப்புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் பெருக வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்த நன்னாளில் என் அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடிய தமிழ் மக்கள், அந்த நாள் வேறு ஒரு நாளுக்கு மாற்றப்பட்டதால் மனமுடைந்தார்கள்.  வலிந்து திணிக்கப்படுகின்ற மாற்றங்களை மக்கள் ஒரு நாளும் ஏற்பதில்லை.

எனவே, சித்திரை முதல் நாளையே பெரும்பான்மையான உலகத் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடினார்கள்.  சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக மீண்டும் அதிகாரர்வமாக அறிவிக்க வேண்டுமென பல கோடி தமிழர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், மக்களின் மனம் விரும்பும் மக்கள் அரசாக செயல்படும் இவ்வரசு சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என மாற்றி அறிவித்தது. இப்புத்தாண்டில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் பெருக வேண்டும்; எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; தமிழர் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.     

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்