முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் முருகன் கோயிலில் புதிய பேட்டரி கார்

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருச்செந்தூர், ஏப்.15 - திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.3.75 லட்சம் செலவில் புதிய பேட்டரி காரை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார். கோவிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கோவில் பிரகாத்தில் எளிதாக சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக பேட்டரி கார் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலும் ரூ.3.75 லட்சம் செலவில் புதிய பேட்டரி கார் வாங்கப்பட்டது. இந்த பேட்டரி கார் பக்தர்களின் பயன்பாட்டுக்கு நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று கோவில் வசந்த மண்டபம் முன்பு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் பொற்கொடி முன்னிலை வகித்தார். இணை ஆணையர் அர.சுதர்சன் வரவேற்றார். விழாவில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பக்தர்களின் பயன்பாட்டுக்கு புதிய பேட்டரி காரை கொடி அசைத்து இயக்கி வைத்தார்.

இதையடுத்து அந்த காரில் வயதான பக்தர்கள் கோவில் கிரிபிரகாரம் வழியாக சண்முக விலாச மண்டபம் வரை சென்று இறங்கி கோவிலுக்குள் சென்றனர். பேட்டரி கார் காலை கோவில் நடை திறக்கப்பட்டது முதல் இரவு கோவில் நடை அடைக்கப்படும் வரை பக்தர்களின் பயன்பாட்டுக்காக இலவசமாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர்கள் ராமசாமி, வெங்கடேசன், சுப்பையா, ரோஸினி, வெங்கடேசன், அம்பிகண்ணன், உதவி கோட்ட பொறியாளர் முருகன், பொறியாளர் பூவலிங்கம், தக்கார் உதவியாளர் நாகராஜன், தலைமை மணியம் ராமசாமி, சுப்பிரமணியன், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, மாவட்ட அண்ணா தொழிற்சங்க முத்தலிபா, திருச்செந்தூர் பேரூராட்சி தலைவர் சுரேஷ்பாபு, ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் விஜயகுமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் மகேந்திரன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் லிங்ககுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஏரல் ரமேஷ், கவுன்சிலர்கள் வடிவேல், சண்முகசுந்தரம், லட்சுமணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கணேசன், தமிழ் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோவில் உதவி ஆணையர் க.செல்லத்துரை நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்