முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாதது

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, ஏப். - 16 - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நிலவும் மின்வெட்டு தவிர்க்க முடியாத ஒன்று என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு கடுமையாக நீடிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மின்வெட்டு என்ற அரக்கனின் கையில் சிக்கி இந்திய மக்கள் சொல்லொனாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தமிழகத்திலும் மின்வெட்டு நீடிக்கிறது. இதை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கையை எடுத்து வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்தும் கூட மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட நெருக்கடி தீர்ந்தபாடில்லை.  கூடன்குளம் அணுமின் நிலையத்தில் மின்சாரம் எப்போது அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறதோ, அப்போதுதான் பிரச்சினை தீர வாய்ப்புள்ளது. ஜூன் மாதம் முதல் படிப்படியாக மின்வெட்டு குறையும் என்று தமிழக முதல்வரும், சட்டசபையில் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் கடுமையான மின்வெட்டு நீடிக்கிறது. இதை அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நிலவும் மின்வெட்டு தவிர்க்க முடியாதது. காரணம், மின்சாரத்தை அனுப்புவதிலும், அதை விநியோகம் செய்வதிலும் இழப்பு ஏற்படுகிறது. இந்த மின்வெட்டு தவிர்க்க முடியாத ஒன்று. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்றால் கட்டணத்தைத்தான் உயர்த்த வேண்டும். ஆனால் அதை செய்ய எனக்கு விருப்பமில்லை. தீர்வு இருக்கிறது. ஆனால் மனமில்லை. இமாச்சல பிரதேசத்தை போல என்னாலும் அதிகம் வசூலிக்க முடியும். ஜம்மு காஷ்மீரில் ஒரு யூனிட்டுக்கு சராசரியாக ரூ. 2.70 வசூலிக்கப்படுகிறது. ஆனால் இமாச்சல பிரதேசத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.78 வசூலிக்கப்படுகிறது. ஆனால் அப்படி கட்டணத்தை உயர்த்த எனக்கு மனமில்லை. மின்சார திருட்டை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். சிக்கிம் மாநிலத்தில் நுகர்வோருக்கு மலிவு விலையில் மின்சாரம்  அளிக்கப்படுகிறது. இங்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.21 வசூலிக்கப்படுகிறது. ஆனால் அசாமில்தான் மிக கடுமையான மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 5.12 காசு வசூலிக்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்