முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச மின் மோட்டார்களை விவசாயிகளுக்கு கொடுக்காமல் ஏமாற்றிய கருணாநிதி

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், மார்ச். - 27 - விவசாயிகளுக்கு பாசன வசதிக்காக இலவச மின் மோட்டார்கள் வழங்கப்படும் என்று தனது ஆட்சிக்காலத்தில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால் இந்த திட்டம் பெயரளவிற்கே செயல்பட்டது. ஒரு சிலருக்கு மட்டும் இலவச மின்மோட்டார்களை கொடுத்து விட்டு 90 சதவீதம் பேருக்கு பட்டை நாமம் சாத்திவிட்டார் கருணாநிதி என்பது தான் மறுக்கமுடியாத உண்மை. இதனால் விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்த கருணாநிதி, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மைனாரிட்டி அரசாக ஆட்சி நடத்திய கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் பட்ட இன்னல்களுக்கு அளவே இல்லை. இலவச டி.விக்களை நூற்றுக்குநூறு சதவீதம் கொடுக்காமல் ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு மீதியுள்ள மக்களை ஏமாற்றியவர் கருணாநிதி. கொடுக்கப்பட்ட டி.வி. க்களும் வெடித்து சிதறிய வரலாறும் உண்டு. பல டி.வி.க்கள் பழுதாகிப்போனதும் உண்டு.

அது மட்டுமல்லாது, தொடர் மின்வெட்டால் தமிழகம் தொழில்துறையில் பின்னோக்கி சென்று கொண்டிருக்க இலவச மின் மோட்டார் திட்டம் என்ற ஒன்றை அறிவித்தார். ஆனால் இந்த திட்டத்தால் விவசாயிகள் பயனடைந்தார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறு சிலருக்கு வழங்கியிருந்தாலும் அதுவும் தி.மு.க அபிமானிகளுக்கு வழங்கப்பட்டதாகவே கூறப்படுகிறது. 

இலவச மின்மோட்டார்கள் தங்களுக்கு கிடைத்து விடும் என்று காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே கருணாநிதி பரிசாக தந்துள்ளார். 

அது மட்டுமல்லாது விவசாய மின்சாரத்தை தினம் 5 மணி நேரம் கட் செய்தார். இதனால் பயிர்களுக்கு போதிய நீரை பாய்ச்ச முடியாததால் பயிர்கள் சாவியாகி விவசாயிகள் நஷ்டத்தையே சந்தித்துள்ளனர். மேலும் புதிய மோட்டாரை விலை கொடுத்து வாங்க முடியாத விவசாயிகள் அருகில் உள்ள கிணற்று நீரை விலைக்கு வாங்கி தங்களது நிலங்களில் விளைந்துள்ள பயிர்களை காப்பாற்றினர். இலவச மோட்டார் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு கருணாநிதி பட்டை நாமம் சாத்தி விட்டார். 

மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கருணாநிதி விவசாய நிலங்களை காவு கொடுத்து விட்டார். அது மட்டுமல்லாது விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பல விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறி விட்டன. விவசாயிகளின் துன்பங்களை கருணாநிதி கண்டு கொள்ளாததால் தமிழகத்தில் விவசாய நிலங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதுடன் விவசாய பொருட்கள் உற்பத்தியும் குறைந்து விட்டது. ஆகவே நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony