முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டிலும் தங்கபாலு கொடும்பாவி எரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

ஈரோடு,மார்ச்.- 27 - காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு ஒருதலைப் பட்சமாக நடந்ததாக கூறி தமிழகம் முழுவதும் தங்கபாலுவின் உருவபொம்மை எரிப்பு உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த வெள்ளியன்று சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவன் அடித்து நொறுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காங்கிரசார் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் அருகில் தங்கபாலுவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீர் என அவர்கள் கொண்டுவந்திருந்த தங்கபாலுவின் கொடும்பாவியை நடுரோட்டில் போட்டு எரித்தனர். மேலும் வேட்பாளர் தேர்வில் தாழ்த்தப்பட்டோரை வேண்டும் என்றே புறக்கணித்த தங்கபாலு ஒழிக என்று கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவர் மோகன்குமார் கூறுகையில், காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் மாநில எஸ்.சி., எஸ்.டி.பிரிவு தலைவர் செங்கை செல்லப்பாவிற்குக்கூட சீட்டு கொடுக்கப்படவில்லை. 

தங்கபாலு திட்டமிட்டேதான் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு துரோகம் செய்துள்ளார். மேலும் தங்கபாலு தன் மனைவி மற்றும் ஆதரவாளர்களுக்கு மட்டும் சீட் வழங்கியுள்ளார்.  தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழப்பதற்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் ஓட்டை வாங்கத் தவறியதும் ஒரு காரணம் என்றும் ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். போன்ற தலைவர்கள் கூறியும் தங்கபாலு அதனை புறக்கணித்துள்ளார். தங்கபாலுவை தலைவர் பதவியில் இனியும் இருக்கச் செய்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை ஆண்டவன் வந்தாலும் காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார். 

இந்த போராட்டத்தில் மாநகர தலைவர் பிரபாகர், முகமது அர்ஜத், பாட்சா உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony