முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்னம் ஒதுக்கீடு செய்வதில், தேர்தல் கமிஷனின் சட்டதிட்டங்கள் செல்லும்

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.- 19 - அங்கீகாரம் செய்யப்படாத பிராந்திய கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய தேர்தல் கமிஷன் விதித்துள்ள சட்டதிட்டங்கள் அல்லது வரைமுறைகள் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது. பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றுக்கான தேர்தல்களில் அங்கீகாரம் பெற்ற தேசிய அரசியல் கட்சிகளும் அங்கீகாரம் செய்யப்படாத மாநில அல்லது பிராந்திய அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடுகின்றன. தேசிய அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே பொதுவான தேர்தல் சின்னங்கள் தேர்தல் கமிஷனால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் பிராந்திய கட்சிகளுக்கு பொதுவான தேர்தல் சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷன் சில விதி முறைகளை வகுத்துள்ளது. அதன்படி சட்டமன்ற தேர்தலில்  ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்கு ஒரு கட்சி  வாக்குகளை பெறவேண்டும். அல்லது இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலாவது அக்கட்சி வெற்றிபெற வேண்டும். அல்லது பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சி ஒரு எம்.பி. தொகுதியை பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அந்த பிராந்திய கட்சிக்கு பொதுவான தேர்தல் சின்னம் வழங்கப்படும் என்று தேர்தல் கமிஷன் விதிமுறைகளை வகுத்துள்ளது. தேர்தல் கமிஷனின் இந்த விதிமுறைகளை எதிர்த்து பிரஜா ராஜ்ஜிய கட்சி, பகுஜன் ஆகாதி கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் உள்ளிட்ட பல்வேறு பிராந்திய கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், எஸ்.எஸ். நிஜார், ஜஸ்தி செலமேஸ்வர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் நடத்தியது. இந்த விசாரணைக்கு பிறகு அங்கீகாரம் செய்யப்படாத பிராந்திய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தேர்தல் கமிஷன் வகுத்துள்ள தற்போதைய விதிமுறைகள் செல்லும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். என்றாலும் தேர்தல் கமிஷனின் இந்த விதிமுறை உத்தரவு தவறானது என்று நீதிபதி செலமேஸ்வர் தனது தனிப்பட்ட கருத்தை பதிவு செய்துள்ளார்.  சாதாரண மக்கள் குறிப்பாக படிக்காத  மக்கள் இந்த கட்சிக்குத்தான் நாம் ஓட்டுப்போடுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள பொதுவான தேர்தல் சின்னத்தை பிராந்திய கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு  இவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.  மூன்று நீதிபதிகள் கொண்ட இந்த டிவிசன் பெஞ்சில் 2 நீதிபதிகள் தேர்தல் கமிஷனின் தற்போதைய விதிமுறை செல்லும் என்று கூறியுள்ளனர். அதனால் இந்த மெஜாரிட்டி உத்தரவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்