முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி-5 அணு ஆயுத ஏவுகணை சோதனை வெற்றி

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

பாலசோர், ஏப்.20 - ஆயிரம் கிலோ அணு ஆயுதத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி- 5 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த அபார வெற்றியை தொடர்ந்து இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏவுகணை உற்பத்தியில் இந்தியா ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ளது. திரிசூல், பிரமோஸ் என்று பல்வேறு ஏவுகணைகளை உற்பத்தி செய்துள்ள இந்திய விஞ்ஞானிகள்,  அக்னி ஏவுகணையையும் தயாரித்துள்ளனர்.

அக்னி ஏவுகணை வரிசையில் ஏற்கனவே அக்னி, அக்னி-1, அக்னி-2, அக்னி- 3, அக்னி-4 என்று பல ஏவுகணை சோதனைகளை நடத்திய இந்தியா இப்போது அக்னி 5 என்ற ஏவுகணையை தயாரித்து வெற்றி பெற்றுள்ளது.

அக்னி ஏவுகணை சோதனை நேற்று முன்தினமே நடப்பதாக இருந்தது. ஆனால் மின்னல் மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்த சோதனை  நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதை அடுத்து நேற்று ஒரிஸ்ஸா மாநிலம் பாலசோர் அருகில் உள்ள வீலர்ஸ் தீவில் இருந்து  அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

நடமாடும் ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை நேற்று காலை 11 மணிக்கு செலுத்தப்பட்டது.

ஆசியாவின் எப்பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஐரோப்பிய நாடுகளையும் தாக்கும் வல்லமை கொண்டது. 

ஆயிரம் கிலோ அணு ஆயுதங்களை ஏந்தியபடி 5,000 கி.மீ. தூரம் வரை பறந்து சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அக்னி-5 ஏவுகணை தரையிலிருந்து தரைக்கே பாய்ந்துசென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணையாகும். 

திட்டமிட்டபடி இந்த ஏவுகணை 20 நிமிடத்தில்  குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி வெற்றி பெற்றதாக இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டத்தில் எந்த இடத்தை வேண்டுமானாலும் தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை 1000 கிலோ எடையுள்ள அணு குண்டை சுமந்து சென்று தாக்கும்.

தற்போது அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 4 நாடுகளிடம் மட்டுமே இருக்கிறது. இந்த வரிசையில் இப்போது இந்தியாவும் சேர்ந்து ஒரு புதிய மைல் கல்லை ஏற்படுத்தியுள்ளது.

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதை அடுத்து இந்திய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை விரைவில்  நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு பிரதமர் மன்மோகன் சிங், ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோர் இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்