Idhayam Matrimony

மாவோயிஸ்ட்டு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.20 - கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வை விடுதலை செய்ய மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற மாவோயிஸ்ட்டுகளின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கும் ஒரிசா மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஒரிசா மாநிலம் லட்சுமிபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜின்னா ஹிக்காக்காவை மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் கடந்த மாதம் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இது ஒரிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வை விடுதலை செய்யவேண்டுமானால், ஒரிசா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில முக்கியமான மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்ட்டுகள் நிபந்தனை விதித்துள்ளனர். ஆனால் இந்த நிபந்தனைகளை ஏற்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு) கங்கூர்தேக் பக்ஷி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

ஒரிசாவில் முக்கியமான மாவோயிஸ்ட்டு நக்ஸலைட்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் உயிரைப் பணயம் வைத்து பிடித்துள்ளனர். அவர்கள் இப்போது ஒரிசா சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற மாவோயிஸ்ட்டுகளின் கோரிக்கையை ஒரிசா மாநில அரசு ஏற்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் பக்ஷி கேட்டுக்கொண்டுள்ளார். பக்ஷி தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் ஒரு வல்லுனராக இருந்துவந்தவர். 

தாம் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை ஒரு அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் பக்ஷி தனது மனுவில் கேட்டிருந்தார். பக்ஷியின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.எஸ்.தாக்கூர், ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச்,  இந்த மனு மிகவும் காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. நீங்கள் கடைசி நேரத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துவிட்டு அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோருகிறீர்கள். இது எப்படி சாத்தியமாகும் என்று மனுதாரரை நீதிபதிகள் கேள்வி கேட்டனர். இந்த மனு மீது மத்திய அரசின் சட்ட வல்லுனரின் உதவி தேவைப்படுகிறது என்று கூறிய நீதிபதிகள் இதன் மீதான விசாரணையை 19.4.2012(நேற்று)க்கு ஒத்திவைத்தனர்.  

இந்த நிலையில் எம்.எல்.ஏ.வை விடுவிக்க ஏதுவாக 5 மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகளை ஒரிசா மாநில அரசு நேற்று முன்தினம் விடுதலை செய்துவிட்டது. என்றாலும்கூட முன்னாள் ராணுவ அதிகாரி தாக்கல் செய்த மனுமீதான  விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் இந்த விஷயம் தொடர்பாக ஒரிசாவில் உள்ள ஒரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மனுதாரர் அணுகலாம் என்று ஆலோசனை வழங்கினர். இருந்தாலும்கூட இந்த வழக்கில் மத்திய அரசு, ஒரிசா மாநில அரசு ஆகியவற்றின் கருத்துக்களை கேட்க இவ்விரு அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்