முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஜூன் மாதம் கடைசியில் மின்சார உற்பத்தி தொடங்கும்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை, ஏப் - 21 - நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக, அணுமின் நிலையத்தில் மீண்டும் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அணுமின் நிலையத்தில் எத்தனை நாட்களில் மின்சார உற்பத்தியை தொடங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்வதற்கும், விஞ்ஞானிகளுடன் அதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்கும் நேற்று முன்தினம் இந்திய அணு மின்சார கழக தலைவர் எஸ்.கே.ஜெயின் கூடங்குளம் வந்தார். அவருடன் ரஷிய நாட்டைச் சேர்ந்த அணு உலை கட்டுமானம், கட்டமைப்பு நிறுவன தலைவர் லிமரன்கோ வலேரி மற்றும் ரஷிய உயர் விஞ்ஞானிகள் சிலரும் வந்து இருந்தனர்.நேற்று முன்தினம் அவர்கள் ஆய்வு செய்து முதல் அணு உலையில், மின் உற்பத்தி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே ராதாபுரம் தாலுகாவில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் தலைவர்கள் ஒரு கோரிக்கை மனுவை அணு மின்சார கழக தலைவர் எஸ்.கே.ஜெயினிடம் அளித்தார்கள். அதில் உள்ள கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

விஞ்ஞானிகளுடன் எஸ்.கே.ஜெயின் நேற்று 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார். பின்னர் மாலை 5 மணி அளவில் அணுமின் நிலையத்தில் உள்ள கூட்ட அரங்கில் நிருபர்களுக்கு, ரஷிய விஞ்ஞானிகளுடன் கூட்டாக பேட்டி அளித்தார். பேட்டியின் போது எஸ்.கே.ஜெயின் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் பணிகளை தொடங்குவதற்கு தக்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

ஜப்பான் நாட்டில் புகுசிமா அணுஉலை விபத்து காரணமாக கூடங்குளம் பகுதி மக்கள் அச்சமடைந்து திடீர் போராட்டத்தை தொடங்கினர். அந்த போராட்டத்துக்கு முன்பே மாதிரி எரிபொருளை நிரப்பி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெப்பநீர் பரிசோதனை ஓட்டம் நடத்தி இருந்தோம்.

இந்த நிலையில், கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டம் காரணமாக 6 மாதங்களாக பணிகள் ஏதும் நடைபெறாமல் அணு உலை முடங்கிக் கிடந்தது. அரசு எடுத்த நடவடிக்கைக்கு பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த காலதாமதத்தால் அணு உலையில் உள்ள அனைத்து கருவிகளும் முன்புபோல் சரியாக வேலை செய்கிறதா? என்பதை மறுபரிசோதனை செய்து பார்த்தோம். இந்த சோதனையும் 95 சதவீதம் வரை முடிந்துவிட்டது.

அடுத்தக்கட்டமாக கோர் கூலிங் சிஸ்டம் என்ற பரிசோதனையை மேற்கொள்ள உள்ளோம். இதனை ஒருங்கிணைந்த அணு உலை குளிரூட்டும் சோதனை என்று கூறுவார்கள். ஒரு வாரத்தில் இந்த சோதனையை நடத்த இருக்கிறோம். அதன் பிறகு, இந்திய அணு மின்சார ஒழுங்குமுறை வாரியத்துக்கு அறிக்கை அனுப்புவோம். ஏற்கனவே வெப்பநீர் சோதனை குறித்தும் அறிக்கை அனுப்பி இருக்கிறோம்.

இந்த அறிக்கைகளின்படி அணுமின்சார ஒழுங்குமுறை வாரியம் முறையான ஒப்புதலை அளிக்கும். அதன் பின்னர் அணு உலையில் நிரப்பப்பட்டு இருக்கும் மாதிரி எரிபொருளை அகற்றிவிடுவோம். பின்னர் யுரேனியம் எரிபொருளை நிரப்புவோம்.

யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி சுமார் ஒரு மாதம் வரை நடைபெறும். அதன் பிறகு மின் உற்பத்தி தொடங்கப்படும். ஒட்டுமொத்தமாக கணக்கிடும் போது இன்னும் 2 மாதங்களில், அதாவது ஜூன் மாதம் கடைசியில் அல்லது ஜூலை மாதத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப்படும்.

கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பிலும், இப்பகுதி மக்களின் பாதுகாப்பிலும் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். நாட்டு மக்களின் நலனில் எங்களுக்கும் அக்கறை இருக்கிறது. கூடங்குளத்தில் சுனாமி, நில அதிர்வு போன்றவை ஏற்பட்டாலும் அணு உலைக்கு எந்த பாதிப்பும் வராது. புகுசிமா அணு உலையைவிட பலமடங்கு நவீன வசதிகளுடன் இந்த அணு உலை உள்ளது.

சமீபத்தில் இந்தோனேசியா கடலில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் நில அதிர்வு இருந்தது. ஆனால், கூடங்குளத்தில் மிகச்சிறிய நில அதிர்வு கூட இல்லை. இதுதான் உண்மை.

கூடங்குளத்தில் 3-வது, 4-வது அணு உலைகளை அமைப்பது பற்றியும் நாங்கள் ஆலோசித்து உள்ளோம். நீரியியல், நிலவியல், கடலியல் குறித்து பல்வேறு உயர்மட்ட நிபுணர்கள் ஆய்வு நடத்திய பின்னர்தான், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே அவை பற்றி எந்த சந்தேகமும் அடைய தேவையில்லை.

கூடங்குளம் பகுதி மேம்பாட்டுக்காக ஏற்கனவே அணு மின்சார கழகம் சாலை, குடிநீர் வசதிகளையும், பள்ளிக்கூடத்தை மேம்படுத்துவதற்கும் உதவி செய்து உள்ளது. தற்போது மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதியும் ஒதுக்கீடு செய்து உள்ளன. தகுந்த வளர்ச்சி திட்டங்களுக்காக எங்களிடம் நிதி கேட்டால் இன்னும் கொடுக்க தயாராக இருக்கிறோம்.

மக்களுக்கு விரைவில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிப்போம். ஒருவேளை விபத்து ஏதும் ஏற்பட்டால் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கேட்கிறீர்கள்? அப்படி ஏதும் ஏற்பட்டால் மாவட்ட கலெக்டருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும். மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்க்கால நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும். இதற்காக மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்த குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அணுமின் நிலையத்தில் 6 மாதங்களுக்கு ஒருமுறையும், அணு உலை வளாகத்தில் ஆண்டுக்கு ஒருமுறையும், சுற்றுப்புற கிராமங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அணு மின்சார கழக தலைவர் எஸ்.கே.ஜெயின் கூறினார்.பேட்டியின் போது அணுமின் திட்டங்கள் இயக்குனர் புரோகித், ரஷியாவைச் சேர்ந்த லிமரன்கோ வலேரி, அணுமின் நிலைய இயக்குனர்கள் ஆர்.எஸ்.சுந்தர், பானர்ஜி, நிதி இயக்குனர் பிரேமன் தினராஜ் மற்றும் ரஷிய விஞ்ஞானிகள், அணு மின்சார கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்