எனக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டம் நடத்துவதா?

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.22  - தென் மண்டல செயலாளராக இருக்கும் எனக்கு தெரியாமல் மு.க.ஸ்டாலின் எப்படி இளைஞரணி கூட்டத்தை நடத்தினார் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆவேசமாக கேட்டுள்ளார். திமுக மாநில பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு நேர்காணல் நடத்தி தேர்வு செய்து வருகிறார். இதில் சேலம் மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சரும், திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் எதிர்ப்பு தெரிவித்தார். எங்கள் மாவட்ட நிர்வாகிகள் தேர்வை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று தலைமைக்கு கடிதமும் எழுதினார். இதன் பிறகு அவரை சமாதானம் செய்து அங்கு மு.க.ஸ்டாலின் இளைஞரணி நிர்வாகிகளை தேர்வு செய்தார். தென் மாவட்டங்களில் தேர்வு செய்யுமபோது இங்கு மு.க.அழகிரிக்கு அதிகமான ஆதரவாளர்களால் பிரச்சனை ஏற்படும் என்று கருதிய மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே தலைமை கழக அறிவிப்பை வெளியிட்டு, அதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

    முழுமையாக மு.க.அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகரில் இளைஞரணி நிர்வாகிகள் நேர்காணலுக்கு மு.க.ஸ்டாலின் காத்துக்கொண்டிருந்தார். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெளிநாடு சென்றிருந்த வேளையில் திடீரென மதுரையில் நேர்காணல் நடைபெற்றது. கடந்த 13 மற்றும் 14 ம்தேதி நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது. 14ம் தேதி திமுக பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்கள் பி.மூர்த்தி, கோ.தளபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் முக்கியமான நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மு.க.ஸ்டாலின் சென்னை சென்றதும் தலைமை கழகத்தில் முறையிட்டதின் பேரில் மதுரை திமுக நிர்வாகிகள் இசக்கிமுத்து, சிவக்குமார், உதயகுமார், சின்னம்மாள், ரவீந்திரன், ஒச்சுபாலு, கோபிநாதன், பாண்டியராஜன், முபாரக்மந்திரி, முருகன், ராமலிங்கம், வி.கே.குருசாமி, தர்மலிங்கம், ஜெயராஜ், பி.எம்.மன்னன் ஆகிய 17 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. வெளிநாடு சென்று திரும்பிய மு.க.அழகிரியிடம் பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகிகள் முறையிட்டனர். உங்களுடைய பெயரை புறக்கணித்ததால்தான் நாங்கள் நிகழ்ச்சியை புறக்கணித்தோம் என்றும் தெரிவித்தனர். மேலும் விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பப்பட்ட மதுரை மாநகர நிர்வாகிகள் 17 பேரும் விளக்கம் அளித்து தலைமை கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் விட்டனர்.

    இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து மதுரை திரும்பிய  மு.க. அழகிரி ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, திமுகவில் நான் தென்மண்டல செயலாளராக இருக்கிறேன். எனவே தென் மண்டல பகுதியில் என்ன நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தாலும் எனக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு நடப்பது பற்றியோ, மதுரையில் பொதுக்கூட்டம் நடப்பது பற்றியோ என்னிடம் மு.க.ஸ்டாலின் முன்பே தெரிவிக்கவில்லை. இது போன்று பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் என்னிடம் ஆலோசிப்பதில்லை. தென் மண்டல செயலாளர் என்ற முறையில் என்னிடம் ஆலோசித்திருக்க வேண்டும். கட்சி தலைவர் ஜனநாயக முறையில் நடந்து கொள்கிறார். ஆனால் மற்ற தலைவர்கள் யாரும் அவரைப்போல நடந்து கொள்வதில்லை. கட்சி தலைவரை  பொறுத்தவரை அவர் மிகச்சரியாக செயல்படுகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தலைவர்களுக்கு அவர் உரிய மரியாதை கொடுக்கிறார். தலைவரின் இந்த ஜனநாயக வழியை மற்றவர்கள் பின்பற்றுவதில்லை. சென்னையில் இருந்து வருபவர்களை ரயில்நிலையத்திற்கு சென்று கண்டிப்பாக வரவேற்க வேண்டும் என்று கட்சியில் சட்டதிட்டமோ, விதியோ இல்லை. இதை நான் பலதடவை விளக்கி விட்டேன். மதுரையில் நடந்த சம்பவம் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் என்னை சந்தித்து விளக்கம் கொடுத்தனர். திமுக மேலிடம் கேட்ட விளக்கத்திற்கு உரிய பதிலை அனுப்பியுள்ளனர்.

    ஸ்டாலின் மதுரை வந்தது பற்றி எனக்கு முறைப்படி எந்த தகவலும் சொல்லப்படவில்லை. எனவே அவரது மதுரை நிகழ்ச்சிகளை புறக்கணிக்குமாறு நான் என் ஆதரவாளர்களிடம் அறிவுறுத்தியதில் எந்த தவறும் இல்லை. கட்சியில் ஒருவர் ஒரு பதவி தான் வகிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயராமன் மண்டல தலைவர் பதவியையும் வகித்து வருகிறார் அது எப்படி? இவ்வாறு அவர் கூறியுள்ளார். மு.க.அழகிரியின் இந்த ஆவேச பேட்டியால் திமுக தலைமை கழகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியின் மோதலை எப்படி சமாளிப்பது என்று திமுக தலைவர் கருணாநிதி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்: