முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

கொழும்பு,ஏப்.22 - இலங்கை சென்ற இந்திய எம்.பி.க்களின் சுற்றுப்பயணம் முடிந்தது. அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேவுன் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசி தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பி.க்கள் குழு தனது பயணத்தை முடித்துக்கொண்டது. பயண முடிவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை எம்.பி.க்கள் குழு தலைவர் சுஷ்மா சுவராஜ் நேற்று சந்தித்து பேசினார். தமிழர்கள் அதிகமாக வாழும் வவுனியா அருகே மானிக்பாம் முகாம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை கேட்டறிந்தார். கிழக்குப்பகுதியான திரிகோணமலைக்கு சென்ற எம்.பி.க்கள் குழுவினர் மட்டக்கிளப்பு சென்று இந்திய உதவியுடன் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டனர். சம்பூர் முகாம்களில் உள்ள தமிழர்களை எம்.பி.க்கள் குழு பார்க்க வராதது பெரிய ஏமாற்றம் அளிக்கிறது என்று திரிகோணமலை பிசப் ஜோசப் கூறினார்.

இதனிடையே மட்டக்கிளப்பில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு எம்.பி.க்கள் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு வந்து சேர்ந்தனர். கொழும்பில் நேற்றுமுன்தினம் மாலையே எம்.பி.க்கள் குழுவினர் அதிபர் ராஜபக்சேவை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று நேற்றுமுன்தினம் காலையிலேயே சுஷ்மா சுவராஜ் தனியாக போய் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு ராஜபக்சே சிற்றுண்டி விருது அளித்து கெளரவித்தார். இருவரும் சாப்பிட்டுக்கொண்டே பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிபர் மாளிகையின் செய்தித்துறை தெரிவித்தது. இந்த சந்திப்பின்போது இந்திய தூதர் அசோக் காந்தா, இலங்கை அமைச்சர்கள் பெரீஸ், லலித் வீரதுங்கா ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது தமிழர்களுக்கு அதிகார பங்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.  எம்.பி.க்கள் குழுவை தவிர்த்து சுஷ்மா மட்டும் ராஜபக்சேவை சந்தித்தது எம்.பி.க்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட விரும்பவில்லை. சந்திப்பு மட்டும் நடைபெற்றால்போதும் தமிழக எம்.பி.க்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். மேலும் மத்திய அரசின் ஆலோசனையின்பேரிலேயே சுஷ்மா தனியாக ராஜபக்சேவை சந்தித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எம்.பி.க்கள் குழு நாடு திரும்பிய பிறகு இலங்கையில் நடந்த விபரங்களை அறிக்கையாக தயாரித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தாக்கல் செய்கிறார்கள். இந்த குழுவின் பயணத்தால் உடனடியாக அரசியல் தீர்வு கிடைக்காவிட்டாலும் சிறிதளவு ஆறுதலாவது கிடைத்துள்ளது என்று தமிழ் பிரிவுகளில் பிளாட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony