முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலை ஒழிக்க அடுத்த கட்ட நடவடிக்கை: ஹசாரே ஆலோசனை

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2012      ஊழல்
Image Unavailable

நொய்டா,ஏப்.- 23 - நாட்டில் ஊழலை ஒழிக்க அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து அண்ணா ஹசாரே குழுவினர் நேற்று நொய்டாவில் கூட ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு ஹசாரே தலைமை தாங்கினார். நாட்டில் மலிந்துவிட்ட ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரே குழுவினர் அயராது போராடி வருகின்றனர். ஊழலை ஒழிக்க பாராளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லியில் அண்ணாஹசாரேவும் குரு ராம்தேவும் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்குள் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் அண்ணா ஹசாரே குழுவினர் நேற்று நொய்டாவில் கூடினர். அப்போது ஊழலை ஒழிக்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தினர். குழுவின் முக்கிய உறுப்பினர்களான அரவிந்த் கேஜரிவால், சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், கிரண்பேடி ஆகியோரும் கலந்துகொண்டனர். ராம்தேவ் மீது பல வழக்குகள் இருப்பதால் அவருடன் சேர்ந்து ஊழலை ஒழிக்க போராடினால் ஹசாரே குழுவினர்களுக்கு மதிப்பு குறையும் என்று கருத்து நிலவுகிறது. அதனால் ராம்தேவுடன் சேர்ந்த போராடா ஹசாரே குழுவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயத்தில் ராம்தேவ் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ராஜ்யசபையில் லோக்பால் மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஊழலை எதிர்த்து வருகின்ற ஜூன் மாதம் 3-ம் தேதி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் ஹசாரேவும் ராம்தேவும் சேர்ந்து உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொள்ளப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து நடக்கும் போராட்டங்களுக்கு இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுப்பது என்றும் முடிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்