முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுசக்தி துறையில் இந்தியாவுடன் செக்.குடியரசு ஒத்துழைப்பு

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.- 23 - அணுசக்தி துறையில் இந்தியாவுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொள்ள  விரும்புவதாக இந்தியாவுக்கான  செக். குடியரசு தூதர்  மிலோஸ்லாவ் ஸ்டாசெக் கூறியுள்ளார். இந்தியாவுக்கான செக்.குடியரசு தூதர் மிலோஸ்லாவ் ஸ்டாசெக் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்தியாவுக்கு தேவையான அணுசக்தி சம்பந்தமான உதிரிபாகங்களை வழங்க செக். குடியரசும் செக் நாட்டில் உள்ள அணு சக்தி நிறுவனங்களும் தயாராக உள்ளன என்றும் அவர் கூறினார். செக். குடியரசில் அணுசக்தி நிலையங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு அணுசக்தி தொடர்பான உதிரிபாகங்களை வழங்கும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு செக்.குடியரசுதான் என்றும் அவர் கூறினார். அணுசக்தி துறையில் இந்தியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை வைத்துக்கொள்ள தங்களது நாடு விரும்புவதாக அவர் மேலும் கூறினார். செக்கோஸ்லோவேகியா நாடு செக். குடியரசு என்றும் ஸ்லோவேகியா என்றும் இரண்டாக பிரிவதற்கு முன்பு 1967 இல் இந்தியாவுக்கும் செக்கோஸ்லோவேகியாவுக்கும் இடையே அணுசக்தி தொடர்பான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் இன்னமும் நடைமுறையில் உள்ளது என்றும் ஸ்டாசெக் கூறினார். தங்களது நாட்டின் அணுசக்தி துறை சிறப்பு தூதர் ஏற்கனவே மூன்றுமுறை இந்தியாவுக்கு வருகை புரிந்திருக்கிறார் என்றும் இதேபோல இந்திய அதிகாரிகளும் தங்கள் நாட்டிற்கு வருகை புரிந்திருக்கிறார்கள் என்றும் அப்போது இந்த அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். இந்தியாவுடன் சேர்ந்து அணுசக்தி துறையில் கூட்டு முயற்சி திட்டங்களை நிறைவேற்றவும், தங்கள் நாடு தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். ஜப்பானில் புகுஷிமா அணு சக்தி நிலையம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு இந்த சம்பவத்தின் மூலம் இந்தியா தனது அணுசக்தி பாதுகாப்பு குறித்து ஏராளமான தகவல்களை பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார். எங்களது நாட்டில் இயற்கை எரிவாயு அல்லது எண்ணை வளங்கள் எதுவும் இல்லை. நாங்கள் முழுக்க முழுக்க அணு மின்சாரத்தையே நம்பியிருக்கிறோம். மிகவும் மலிவான விலையில் அணு மின்சாரம் கிடைக்கிறது. அதனால் செக். குடியரசு மக்கள் அணு சக்திக்கு அமோக ஆதரவு அளித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்