முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பத்திரமாக உள்ளார்:போலீஸ்

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

ராய்ப்பூர்,ஏப்.- 23 - சட்டீஷ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் பத்திரமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பால் மேனன் (32),சட்டீஷ்கர் மாவட்டத்தில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டராக இருக்கிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றபோது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அவரது காரை வழிமறித்து பாதுகாவலர்கள் 2 பேர்களை சுட்டுக்கொன்றுவிட்டு அலெக்ஸை கடத்தி சென்றுவிட்டனர். அவரை மீட்க போலீசாரும் மத்திய ரிசர்வ் போலீசாரும் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். சட்டீஷ்கார் மாநிலத்தின் அண்டை மாநிலங்களான ஒரிசா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கலெக்டர் அலெக்ஸ் இருக்கும் இடைத்தை அறிய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் கலெக்டர் அலெக்ஸ் பத்திரமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதுகுறித்து தற்போது விளக்கமாக கூறமுடியாது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேனனை மீட்க முடிந்த அளவு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்படும் என்று சட்டீஷ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கலெக்டர் மேனனை மீட்க அரசுக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே மத்தியஸ்தம் வகிக்க தயார் என்று ஆன்மீக தலைவர் சுவாமி அக்னிவேஷ் விருப்பம் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் நக்சல்களிடம் இருந்து பதிலை எதிர்பார்த்துக்கொண்டியிருப்பதாகவும் சுவாமி அக்னிவேஷ் நேற்று பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளார். மேனை கண்டுபிடித்து பிடிக்க தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் தன் கணவர் மேனனை விடுவிக்க வேண்டும் என்று அவரது மனைவி ஆஷா மேனன், மாவோயிஸ்ட்களை கேட்டுக்கொண்டுள்ளார். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார் என்றும் கடத்தப்பட்டபோது அவரிடம் மருந்து இல்லை என்றும் ஆஷா மேனன் உருக்கமாக கூறியுள்ளார். மேனனுக்கு பல தடவை மிரட்டல்கள் வந்தாலும் அவர் கடமையை தவறாமல் செய்துகொண்டியிருந்தார் என்று மேனனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சுக்மா மாவட்டத்தில் உயரதிகாரிகளுக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் மிரட்டல் இருக்கிறது என்று மேனனிடம் எச்சரித்தோம். பாதுகாப்பு இல்லாமல் எங்கேயும் போக வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டோம். ஆனால் கடமையை செய்வதில் மேனன் கவனமாக இருந்தார் என்று அவரது மாமனார் வேணுகோபால் தெரிவித்துள்ளார். மேனன் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு சட்டீஷ்கர் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேற்று அவர்கள் அவசரமாக கூடி விவாதித்தனர். மேனன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஆள் இல்லாத விமானம் மூலம் முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதற்கு போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆள் இல்லாத விமானம் மூலம் தேடினால் மேனன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் போலீசார் கருதுவதாக தெரிகிறது. இதற்கிடையில் மேனன் கடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சுக்மா மாவட்டத்தில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடத்தப்பட்ட கலெக்டர் மேனன் மக்களோடு மக்களாக நெருங்கி பழகும் குணம் உள்ளவர். கடத்தப்பட்ட அன்று ஒரு நிகழ்ச்சியில் மக்களோடு மக்களாக மாவோயிஸ்ட்கள் கலந்துகொண்டு மேனனை கடத்திச் சென்றதாக மற்றொரு தகவல் கூறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்