முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தல்: அப்துல் கலாமை காங். ஏற்குமா?

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப்.25 - முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதி பவனுக்கு திரும்பக் கூடும் என்று கூறப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து விரைவில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் கூட இல்லை. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் விரும்புகின்றனர். ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், அரசியல் தொடர்பில்லாத ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும் என்று தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

முன்னாள் லோக்சபா தலைவர் ஷங்மாவை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் அறிவிக்கப் போகிறதாமே என்று பவாரிடம் கேட்ட போது, எங்களுக்கு அப்படி ஒரு திட்டம் இல்லை. எங்களுக்கு வெறும் 16 எம்.பி.க்கள்தான் உள்ளனர். அரசியல் தொடர்பில்லாத ஒருவரே இந்த பதவிக்கு பொருத்தமானவர் என்றார். இந்நிலையில் காங்கிரஸ் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணியை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஷாம்பிட்ராடோ, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் ஆகியோரில் யாரையாவது காங்கிரஸ் பரிந்துரைக்க கூடும் என்று கூறப்படுகிறது. சோனியா காந்தியை பிரதமர் பதவிக்கு வர விடாமல் தடுத்தவர் என்பதால்தான் அப்துல் கலாமை காங்கிரஸ் கட்சி 2 வது முறையாக ஜனாதிபதியாக விடாமல் தடுத்தது. ஆனால் தற்போது அனைத்து தரப்பினரும் நெருக்கடி தருவதால் காங்கிரஸ் தடுமாறுகிறது. அதே நேரத்தில் கலாம் தவிர எதிர்க்கட்சிகள் சொல்லும் வேறு ஒரு பொது வேட்பாளரை ஏற்க தயாராக உள்ளது என்று தெரிகிறது. இதனால் மக்களவை சபாநாயகர் மீராகுமாரையும் காங்கிரஸ் பரிந்துரைத்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்