முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற பிரசாந்த் பூஷன் மறுப்பு

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர், ஏப்.25 - நக்சல்களால் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த சத்தீஸ்கர் மாநில கலெக்டர்(சுக்மா மாவட்ட கலெக்டர்) அலெக்ஸ்பால் மேனனை மீட்கச் செல்லும் பொருட்டு தீவிரவாதிகளால் அறிவிக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மறுத்து விட்டார். இந்த விவகாரத்தில் நக்சல்களுடன் பேச்சு நடத்த சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங், தனது தலைமையில் ஒரு குழுவை அமைத்திருந்தார். ஆனால் அதை நக்சல்கள் ஏற்க மறுத்து விட்டனர். 

அதற்கு மாறாக தாங்களே ஒரு குழுவை அவர்கள் அறிவித்தனர். அந்த மூவர் குழுவில் ஒருவர்தான் பிரசாந்த் பூஷன். ஆனால் தூதுக்குழுவாக செல்ல இவர் மறுத்து விட்டார். இதனால் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. இது பற்றி பிரசாந்த் பூஷன் கூறுகையில், 

கலெக்டரை விடுவிக்குமாறு நக்சல்களுக்கு கோரிக்கை விடத் தயாராக இருக்கிறேன். ஆனால் பேச்சு நடத்த தயாராக இல்லை. முதலில் அவரை நக்சல்கள் விடுவிக்கட்டும். அதன் பின்னர் பேசலாம் என்று கூலாக சொன்னார். மேனனை விடுவித்த பிறகு இவர் போய் என்ன பேசுவாரோ தெரியவில்லை. இந்த நிலையில் நக்சல்களுடன் பேச்சு நடத்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான எஸ்.கே. மிஸ்ரா, நிர்மலா புச் ஆகியோரை கொண்ட ஒரு குழுவை சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மற்றொரு கலெக்டருக்கு குறி:

இந்த நிலையில் மேனனை கடத்திய அதே நாளில் தண்டேவாடா மாவட்ட கலெக்டர் ஓம் பிரகாஷ் சவுத்ரியையும் கடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் சவுத்ரி கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்ததால் அவர் தப்பி விட்டார். இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலெக்டர் மேனன் கடத்தப்பட்டது பற்றி விவாதிக்க டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு தகவல் அனுப்பி உள்ளது. அதில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மாவோயிஸ்டு பகுதிகளுக்கு செல்லும் போது அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்