முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.50 கோடியில் பெருஞ் சுற்றுலாத் திட்டம்: அமைச்சர்

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.26 - ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி, அழகர் மலை, குற்றாலம் திருச்செந்தூர் உட்பட சுற்றுலாத்தளங்களில் தலா ரூ.5 கோடியில் கட்டமைப்பு வசதிகள், செட்டிநாடு பகுதியில் ரூ.11 கோடியில் சுற்றுலாத் தொகுப்புத் திட்டம், ரூ.50 கோடியில் நெருஞ் சுற்றுலாத்திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்தார். சட்டசபையில் நேற்று சுற்றுலா மானியக் கோரிக்கையை சமர்பித்து அவர் பேசியதாவது:-

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, சுற்றுலா தகவல் மையம், ஓய்வுக் கூடம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் விளக்குகள், வாகனங்கள் நிறுத்துமிடம், கோவில் குளம் சீரமைப்பு போன்ற சுற்றுலா கட்டமைப்பு பணிகள் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.5 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை முருகன் ஆலயமும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் கோவிலும் உள்ளது.

இங்கு சித்திரைத் திருவிழா, ஆடித் திருவிழா, பங்குனி உத்திரம் போன்ற விழாக் காலங்களில் மிக அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். 

இங்கு பக்தர்களின் வசதிக்காக சுற்றுலா கட்டமைப்பு வசதிகள் ரூ.5 கோடி மதிப்பில் இங்கு ஏற்படுத்தப்படும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பில் பூங்காக்களை அழகுபடுத்துதல், விளக்கு வசதிகள், தங்கும் விடுதி, கழிப்பிட வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம், நீர் விளையாட்டுகள் ஆகிய சுற்றுலா கட்டமைப்பு வசதிகள் ரூ.5 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுற்றுலா தகவல் மையம், பூங்காக்கள், தங்கும் அறைகள், கழிப்பிட வசதிகள், மலைவழிப் பயணப் பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், விளக்கு வசதிகள் தேனி மாவட்டம் மேகமலை மற்றும் சுருளி நீர்வீழ்ச்சி பகுதியில் ரூ.5 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அழகிய நீர்வீழ்ச்சிகளுக்குப் பெயர் பெற்ற மிகச் சிறந்த சுற்றுலா மையமாகும். இங்கு சுற்றுலாத்தகவல் மையம், தங்கும் வசதிகள், அருவிகளில் கட்டமைப்பு வசதிகள், பூங்காக்கள், விளக்கு வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை ரூ.5 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு சுப்ரமணியர் கோயில் மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும். இங்கு முக்கிய விழாக்காலங்களில் லட்சக்கணக்கில்  பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு சுற்றுலா தகவல் மையம், ரத வீதிகள் மேம்பாடு, கூடுதல் தங்கும் விடுதிகள், கழிப்பிட வசிதகள், விளக்கு வசதிகள், பூங்காக்கள், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற சுற்றுலா கட்டமைப்பு வசதிகள் ரூ.5 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலுள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு சுப்ரமணியர் கோவில் மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும். இங்கு சுற்றுலா தகவல் மையம், தங்கும் விடுதிகள், சிமெண்ட் சாலை வசதிகள், பூங்காக்கள், கழிப்பிட வசதிகள்,  விளக்கு வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற சுற்றுலா கட்டமைப்பு வசதிகள் ரூ.5 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.

சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு பகுதியில், கோவில், கலை, கைத்திறன், பண்பாடு போன்றவற்றிற்கு பெயர் பெற்றுள்ள பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி, கானாடுகாத்தான், மாத்தூர், ஆத்தங்குடி, இளையாத்தான்குடி, நேமம் ஆகிய கிராமங்களில் ஊரக சுற்றுலாத் தொகுப்பு திட்டம் ரூ.11 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

பெருஞ்சுற்றுலா திட்டத்தின்கீழ், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி சுற்றுலா சுற்றிலுள்ள சுற்றுலா மையங்களில் சுற்றுலா கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ரூ.50 கோடி மதிப்பில் விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் நீண்டதூரம் பயணம் செய்யும் சுற்றுலப்பயணிகளின் வசதிக்காக தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்ல வசதியாக சுற்றுலா தகவல் மையம், ஓய்வு அறைகள், உணவு விடுதிகள், பூங்காக்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறைகள் போன்ற வசதிகள் நான்கு இடங்களில் மொத்தம் ரூ.8 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.

தூய்மைமிகு இந்தியா திட்டத்தின்கீழ், சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும் இடங்களில் சுற்றுபுறப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில் சுற்றுப்புறச் சுகாதாரம் மேம்படுத்தப்படும். ரூ.5 கோடி மதிப்பில் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, முக்கிய கோவில்கள், பாரம்பரியமிக்க நினைவுச் சின்னங்கள், நீர்வீழ்ச்சிகள், மலை வாசஸ்தலங்கள், படகு குழாம்கள் போன்ற இடங்களை தூய்மையான முறையில் பராமரிக்கவும், திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலாத்தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தருவது மிகவும் அவசியமாகும். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து பிரபலம் அடையாத சுற்றுலாத் தலங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தரக்கோரி அதிக அளவில் கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே, பின்வரும் சுற்றுலா தலங்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மொத்தம் ரூ.10 கோடி மதிப்பில் செய்யப்படும்.

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவி, திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், சிறுவாபுரி முருகன் கோவில், அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயம், திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரர் ஆலயம், ஆவூர் பசுபதீஸ்ரர் - பஞ்ச பைரவர் கோவில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், பொட்டல்புதூர் மொகைதீன், தர்கா, சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் தேவலாயம், பிரான்மலை, நாட்டரசன் கோட்டை, ஏரியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருப்பத்தூர் பரியா மருதீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை மாவட்டம் தவளகிரீஸ்வரர் ஆலயம், சேலம் மாவட்டம் கங்கவள்ளி, வடசென்னிமலை கோவில், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணைப்பகுதியில் அமணலிங்கேஸ்வரர் கோவில், தாராபுரம் ஆஞ்சநேயர் கோவில், விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை, கோமுகி அணை, கூத்தாண்டவர் கோவில், இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில், உத்தரகோசமங்கை, ஓரியூர், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் சிவன் கோவில், விளப்பாக்கம் பஞ்ச பாண்டவர் மலை, கோயம்புத்தூர் மாவட்டம் கல்லாறு, திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை, ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம்.

சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகள் ரூ.10 கோடி செலவில் நெடுஞ்சாலைகள் துறை மூலம் மேம்படுத்தப்படும்.

சுற்றுலா கட்டமைப்பு பணிகளை சிறந்த முறையில் கண்காணிக்க, மாவட்டங்களில் பணியாற்றும் சுற்றுலா அலுவலர்களுக்கு 14 புதிய ஜீப்புகள் ரூ.98 லட்சம் செலவில் வாங்கப்படும்.

சிதம்பரம், கொடைக்கானல், கன்னியாகுமரி, இராமேசுவரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், தருமபுரி, பூம்புகார் ஆகிய இடங்களிலுள்ள சுற்றுலா அலுவலகங்கள், திருச்சிராப்பள்ளி, சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களிலுள்ள சுற்றுலாத்தகவல் மையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை மத்திய மற்றும் எழும்பூர் இரயில் நிலையங்களிலுள்ள சுற்றுலாத்தகவல் மையங்கள், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கட்டபொம்மன் நினைவுக்கோட்டையிலுள்ள சுற்றுலாத்தகவல் மையம், ஐதராபாத்திலுள்ள சுற்றுலாத் தகவல் மையம் ஆகியவை ரூ.54 லட்சம் செலவில் மேம்படுத்தி புனரமைக்கப்படும்.

அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இந்திய சுற்றுலாத்துறையுடன் இணைந்து விளம்பர முகாம்கள் நடத்தப்படும்.

ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத்தலங்களில் கோடை விழா 30 நாட்களும், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய சுற்றுலா விழா ஏழு நாட்களும் நடத்தப்படும். எனவே, சுற்றுலாப் பயணிகள், சுற்றுலாத் தலங்களை சிறந்த முறையில் பார்வையிட திறந்த தளம் சுற்றுலாச் சிறப்பு பேருந்து சென்னை, மதுரை, திருச்சி, மாநகரங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், திருச்செந்தூர் மற்றும் குற்றாலம் ஆகிய இடங்களிலுள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகளிலுள்ள அறைகள் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். மேலும் தமிழக முதல்வரின் ஆணையின்படி, விடுதிகளில் தங்குவதற்கும், பயணங்கள் மேற்கொள்வதற்கும் கைபேசி மற்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும்.

மாமல்லபுரத்தில் ஆடியோ வசதியுடன் கூடிய நடமாடும் சுற்றுலா தகவல் வழிகாட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்