முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் பாலாலய பூஜை

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், ஏப். 26  - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அருள்மிகு சொக்கநாதர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜை நேற்று நடந்தது. முருகப் பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2011 ஜூன் மாதம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயிலின் உப கோயில்களான சன்னதி தெருவில் உள்ள அருள்மிகு சொக்கநாதர் கோயில் மலைக்கு போகும் பாதையில் மலையின் அடிவாரத்தில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டது. 

அதன்படி அக்கோயில்களில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த மாதம் துவங்கியது. மூலஸ்தானத்தில் திருப்பணிகள் துவங்குவதற்காக நேற்று பாலாலய பூஜை நடந்தது. காலை கோயிலில் எழுந்தருளி உள்ள மூலவர்களான சொக்கநாதர், மீனாட்சி அம்மன், கணபதி, நெல்லி மரத்து விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கையம்மன், சண்டிகேஸ்வரர், முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியோரது திருக்கரங்களில் பட்டுநூல் கட்டப்பட்டது. மூலவர்கள் முன்பு கும்பங்களில் புனித நீர் நிரப்பி வைத்து சுவாமிகளின் திருக்கரத்தில் கட்டப்பட்டிருந்த பட்டு நூலின் மறுநுனி கும்பங்களில் கட்டப்பட்டது. 

சிவாச்சார்யார்கள் பூஜைகள் செய்து சுவாமிகளின் சக்தியை புனித நீர் அடங்கிய கும்பங்களில் கலையிறக்கம் செய்தனர். அதனை தொடர்ந்து அந்த கும்பங்கள் யாக சாலையில் வைக்கப்பட்டது. சிவாச்சார்யார்கள் செல்லப்பா, சண்முகசுந்தரம் ஆகியோர் யாகசாலை பூஜை நடத்தினர். தீபாராதனைகள் முடிந்து கும்பங்கள் புறப்பாடாகி, மூலவர்கள் திருவுருவம் வரையப்பட்டிருந்த படத்தின் முன்பு வைக்கப்பட்டது. அந்த கும்பங்களில் இருந்து பட்டுநூல் மூலம் மூலவர்களின் படத்திற்கு சக்தி கலையேற்றம் செய்யப்பட்டது. தீபாராதனைகள் முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று முதல் மூலவர்களின் சன்னதிகளில் திருப்பணிகள் துவங்குகின்றன. மற்றொரு உப கோயிலான பழனியாண்டவர் கோயிலில் விரைவில் பாலாலய பூஜையும் நடக்கவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்