முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதிவுத்துறை கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.26 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், 1 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக திருநெல்வேலியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டடம், கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்து, பதிவுத் துறை மற்றும் வணிகவரித் துறையில் பணிக் காலத்தில் மறைந்த 32 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, பொன்னீற்றான் குளத்தில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகம் கட்டப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலத்திலும், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரிலும் தலா 28 லட்சம் ரூபாய் செலவில் சார் பதிவாளர் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. பதிவுத் துறை அலுவலகங்களுக்கென மொத்தம் 1 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடங்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும்,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  பதிவுத் துறையில் பணிக் காலத்தில் மறைந்த 17 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கும், வணிகவரித் துறையில் பணிக் காலத்தில் மறைந்த அரசு ஊழியர்களின் 15 வாரிசுதாரர்களுக்கும், ஆக மொத்தம் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான ஆணைகளை வழங்கி வாழ்த்தினார். கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளைப்பெற்ற வாரிசுதாரர்கள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவு, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர், வணிகவரி ஆணையர், பதிவுத் துறை தலைவர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்