முக்கிய செய்திகள்

சஸ்பெண்ட் எதிர்த்து விஜயகாந்த் தொடர்ந்த மனு தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

சென்னை, ஏப்.27 - பேரவையிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டதை எதிர்த்து விஜயகாந்த் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பிப் மாதம் தே.மு.தி.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது நாக்கை துருத்திப் பேசிய எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறி சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சட்டசபையில் அவர்கள் நடந்து கொண்ட முறை பற்றி சட்டமன்ற உரிமை மீறல் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அதன்பின் விஜயகாந்த மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த தீர்மானத்தின்படி எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் இந்த சட்டமன்ற கூட்டத்திலும், அடுத்த சட்டமன்ற கூட்டத்திலும் தொடர்ந்து 10 நாட்கள் வரை அவை நடவடிக்கையில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார். இக்காலத்தில் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலும், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் வழங்கப்பட்டுள்ள எந்தவிதமான ஆதாயத்தையும், ஊதியத்தையும் சலுகைகளையும், தகுதிகளையும் பெற முடியாது என பேரவைத் தலைவர் ஜெயக்குமார் அறிவித்தார். இதனால் தான் மக்கள் பணி ஆற்றமுடியவில்லை என்று கூறி சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து விஜயகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அந்த மனுவை நீதிபதி ராமசுப்ரமணியம் ஏற்று விசாரித்தார். விஜயகாந்த் தாக்கல் செய்த மனு மீது ஏற்கனவே விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று பிற்பகல் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி ராமசுப்ரமணியம் உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: