முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி ஆட்சியில் நாள் தவறாமல்நீடித்த மின்சார வெட்டு: மக்கள் குமுறல்

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.- 28 - மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரு நாள் கூட தவறாமல் மின்வெட்டு நீடித்ததால் பொதுமக்கள் பட்ட அவதி கொஞ்சநஞ்சமல்ல. தேர்தல் நெருங்கி விட்ட இந்த நேரத்திலும் கூட கொஞ்சம் கூட, கவலையோ, அச்சமோ படாமல் மின்வெட்டை நீடிக்க விட்டு மக்களை தவிக்க விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது கருணாநிதி அரசு. அதுவும் கடந்த சில நாட்களாக மின்சாரம் பகல், இரவு என்று எல்லா நேரத்திலும் திடீர் திடீரென கட்டாகி விடுகிறது. இதனால் மக்கள் படும் வேதனையும், அவதியும் கொஞ்சநஞ்சமல்ல. இந்த மின்வெட்டு இன்னமும் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். அதுதான் வயிற்றெரிச்சல். தி.மு.க. ஆட்சியில் எத்தனை சா(வே)தனைகளை சொல்லலாம். ஆற்றுப் படுகைகளில் மணலை கடத்துவது, ரேசன் கடைகளில் இருந்து ஒரு ரூபாய் அரிசியை கடத்துவது, சொத்துக்காக ஆட்களையே கடத்துவது இதெல்லாம் தி.மு.க. ஆட்சியில் சர்வசாதாரணம். அது மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த கொலைகளும், கொள்ளைகளும் ஏராளம், ஏராளம். குறிப்பாக, சென்னை நகரில் தனியாக இருந்த பல பெண்களை கழுத்தறுத்து கொன்று விட்டு நகை, பணத்தை கொள்ளைக் கும்பல் கொள்ளையடித்த கதை எல்லாம் இந்த ஆட்சியில் சர்வசாதாரணம். வழிப்பறி சம்பவங்களுக்கோ பஞ்சமே இல்லை. சட்டம் ஒழுங்கு என்பது சுத்தமாக சீரழிந்து விட்டது. 

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட போது அதை வேடிக்கை பார்த்தது தி.மு.க. அரசின் போலீஸ். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போலீசார் மோதிக் கொண்டதை இன்றைக்கும் கூட மறக்க முடியாது. நெல்லை மாவட்டத்தில் ஒரு இன்ஸ்பெக்ட்ர் வெட்டிக் கொல்லப்பட்ட போது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே போனார் ஒரு தி.மு.க. மந்திரி. இப்படி தி.மு.க. ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை. கிரானைட் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று இவர்களது ஊழல் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. இந்த ஆட்சியின் மற்றொரு சாதனைதான் மின்வெட்டு. 

சுதந்திர இந்தியாவாக நாடு மாறிய பிறகு தமிழ்நாட்டை எத்தனையோ தலைவர்கள் ஆண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களது ஆட்சியில் மின்வெட்டு என்பதை நாம் கேள்விப்பட்டே இருக்க முடியாது. ராஜாஜி ஆட்சி செய்தார். பக்தவச்சலம் ஆட்சி செய்தார். காமராஜர் ஆட்சி செய்தார். பிறகு அண்ணா பதவிக்கு வந்தார். அண்ணாவிற்கு பிறகு எம்.ஜி.ஆர் முதல்வரானார். இவர்களுடைய ஆட்சியில் எல்லாம் மின்வெட்டு என்ற வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருக்க முடியாது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் தமிழ்நாட்டை 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது ஆட்சியிலும் ஒரு நாள் கூட மின்வெட்டு இருந்ததாக சரித்திரம் இல்லை. மேலும் ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை என்ன? மின் பற்றாக்குறை மாநிலம் என்ற வரிசையில் தமிழ்நாட்டுக்குத்தான் முதலிடம். 

மின்சாரத் துறை அமைச்சர் என்று சொல்வதை விட மின்வெட்டு அமைச்சர் என்று சொல்வதே சாலப்பொருத்தம் என்று ஆற்காடு வீராச்சாமிக்கு பலரும் பட்டமே கொடுத்து விட்டார்கள். அப்படி பட்டம் கொடுத்தும் கூட அவர் அதைப் பற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. மின் உற்பத்தியை பெருக்காமல் முந்தைய ஆட்சியை குறை சொல்வதிலேயே காலத்தை கழித்து விட்டார் வீராச்சாமி. ஆனால் அவதிப்பட்டது என்னவோ பொதுமக்கள்தான். கடந்த 5 ஆண்டு ஆட்சியில் மின்வெட்டால் மக்கள் பட்ட அவதி கொஞ்சநஞ்சமல்ல. 

நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை கூட மின்வெட்டு நீடித்தது பற்றி மக்களுக்கே தெரியும். இந்த மின்வெட்டால் விவசாயிகள், நெசவாளர்கள், மாணவர்கள் என்று பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். பல தொழில்கள் நாசமாகிப் போயின. ஜவுளித் தொழில், கைத்தறித் தொழில், நெசவுத் தொழில், தீப்பெட்டி தொழில் என்று பல தொழில்களும் பாதிக்கப்பட்டு உற்பத்தி படுபாதாளத்திற்கு போனது. பல தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். தேர்வு நேரத்தில் படிக்க முடியாமல் மாணவர்கள் பட்ட அவதியை சொல்லி மாளாது. 

இப்படி 5 ஆண்டு காலமும் மக்களை வாட்டி வதைத்து எடுத்து விட்டது தி.மு.க. அரசு. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் கூட இவர்களுக்கு கொஞ்சமும் பயமோ, கவலையோ இருப்பதாக தெரியவில்லை. கடந்த ஒரு வாரமாக திடீர் திடீரென மின்சாரம் மாயமாகி விடுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் எந்த நேரத்தில் மின்சாரத்தை அணைப்பார்கள் என்பது எவருக்கும் புரியவில்லை. நாள் ஒன்றுக்கு 3  மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மின்சாரத்தை நிறுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் அதை செய்து விட்டோம், இதை செய்து விட்டோம் என்று வாக்கு கேட்டு வருகிறார்கள். 

வாக்காளர்கள் ஓட்டுப் போடும் போது மின்வெட்டை ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்து விட்டு பொத்தானை அழுத்தினால் நல்லதாக இருக்கும். இல்லாவிட்டால் வருங்காலத்திலும் நாடு இருளில் மூழ்கிப் போகும். மக்களின் வாழ்வும் இருண்டு விடும். இதை தமிழக மக்கள் நினைத்துப் பார்த்தால் அவர்களுக்கு நல்லது. இதைத் தவிர வேறு எதையும் சொல்லத் தெரியவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்