முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடனுக்கான வட்டியை உயர்த்தக்கூடாது: முதல்வர்

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.28 - ஊரக உள்கட்டமைப்பு மேம்பாடு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் கீழுள்ள ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை மாநில அரசுகள் பெற்று பல்வேறு அடிப்படை கட்டுமான வசதிகளை கிராமப்புறங்களில் செய்து வருகின்றன. இதில் தமிழகம் இந்த நிதியை பெறுவதிலும், கட்டமைப்பு வசதிக்கான திட்டங்களை செயல்படுத்துவதிலும் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தற்போது தமிழகத்திற்கு 2,184 கோடி ரூபாயை வங்கி அனுமதித்திருக்கிறது. 

அதை 2013-14 ஆம் ஆண்டுகளில் பெற்று, வரக்கூடிய ஆண்டுகளில் இந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்த ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கான வட்டி வீதம் தொடர்ந்து குறைந்த அளவிலேயே இருக்கும் என்று நம்பப்பட்டது. 

ஆனால் தற்போது ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கான வட்டி விகிதத்தை சமீபத்தில் 6.5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதத்தை உயர்த்தாமல் 6.5 சதவீதம் என்பதை அப்படியே நிர்ணயிக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்திற்கான வேண்டுமானால் 7 சதவீதம் அளவிற்கு உயர்த்தலாமே தவிர, அதற்கு மேல் உயர்த்தக்கூடாது. அப்படியிருந்தால் மாநிலத்தின் நிதிநிலைமை மோசமடையும். ஆகவே இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து உரிய வகையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழையபடி இருந்த 6.5 சதவிகித வட்டியையே இந்நிதிக்கும் பொருந்தக் கூடிய வகையில் இருக்க வேண்டும். மேலும் இந்த வட்டி விகிதத்தை 2012-13-ம் ஆண்டிலேயே செயல்படுத்தவும் வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்