முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் இருக்கும் இடத்தை தெரிவித்தோம்: பாக்.

ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஏப்.29 - பின்லேடன் இருக்கும் இடத்தை அமெரிக்காவுக்கு நாங்கள்தான் தெரிவித்தோம் என்று பாகிஸ்தான் உளவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அபோத்தாபாத் நகரில் ஒரு சொகுசு பங்களாவில் தங்கியிருந்தான். அவனை அமெரிக்க படைகள் ஏறக்குறையை 10 ஆண்டுகளுக்கு மேலாக தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில் அவன் அபோத்தாபாத் நகரில் ஒரு சொகுசு பங்களாவில் தங்கியிருப்பது அமெரிக்க படைக்கு தெரியவந்தது. அவனை உடனே அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்று உடலை கடலில் தூக்கி எறிந்துவிட்டனர். விசாரணையின்போது பல வருடங்களாக பாகிஸ்தானில் பின்லேடன் தங்கியிருந்தது தெரியவந்தது. பாகிஸ்தானில் பின்லேடன் தங்கியிருந்தது அந்த நாட்டு அரசு, உளவு ஸ்தாபனம், ராணுவம், மற்றும் முக்கிய தலைவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்காது. அதனால் கோபம் அடைந்த அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு வழங்கி வரும் உதவிகளை குறைத்து வருகிறது. 

இதனால் பாதிப்பு வரும் என்று கருதும் பாகிஸ்தான் உளவு ஸ்தாபனம் தற்போது திடீரென்று ஒரு குண்டை தூக்கிப்போட்டுள்ளது. அமெரிக்காவின் கோபத்தை தணிப்பதற்காக இந்த குண்டை தூக்கிப்போட்டுள்ளது. அதாவது பின்லேடன் இருந்த இடம் அமெரிக்காவுக்கு தெரிய நாங்கள்தான் முக்கிய காரணம் என்று பாகிஸ்தான் நாட்டு புலனாய்வு அமைப்பான (ஐஎஸ்ஐ) உயரதிகாரி ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவை சீர்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்க உயரதிகாரி ஒருவர் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்தநேரத்தில் பின்லேடன் குறித்து நாங்கள்தான் தகவல் கொடுத்தோம் என்று ஐஎஸ்ஐ.அமைப்பு உயரதிகாரி ஒருவர் கூறியிருப்பது அமெரிக்காவை ஏமாற்றும் வேலையாகும். அந்த அதிகாரி தனது பெயரை கூற விரும்பவில்லை. அதோடுமட்டுமல்லாது உலகில் ஏதாவது ஒரு இடத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியிருந்தால் அது எங்கள் உதவியால்தான் என்று ஐஎஸ்ஐயின் மற்றொரு அதிகாரி தெரிவித்தார். பின்லேடன் உள்பட அல்கொய்தா இயக்கத்தினர்களை வேட்டையாடுவதில் நாங்கள் முழுமையாக ஈடுபட்டிருந்தோம். அமெரிக்க ராணுவத்திற்கு ஒரு செல்போன் நம்பர் கொடுத்தோம். அதன்மூலம் பின்லேடனுக்கு போகும் கொரியர் சேவை தெரியவந்தது. இதன்மூலம்தான் பின்லேடன் இருக்கும் இடத்தை அமெரிக்க படைகள் கண்டுபிடித்து அவனை சுட்டுக்கொன்றது என்று மேலும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்