முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கு வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருக்கவேண்டும்-விஜயகாந்த்

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

திருவள்ளூர், மார்ச் - 28 -​ வில் ஏந்திய அர்சுனனுக்கு மரத்தில் இருந்த பறவையின் கழுத்து மட்டுமே தெரிந்ததை போல் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கு வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருக்கவேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் கூறினார்.  தே.மு.தி.க. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.எச்.சேகர் அ.தி.மு.க. கூட்டணியின் கும்மிடிப்பூண்டி தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பெரியபாளையம் மேம்பாலம் அருகே பிரச்சார வேனில் இருந்தபடி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர்  விஜயகாந்த் நேற்று வாக்கு சேகரித்தார்.  அப்போது விஜயகாந்த் பேசியதாவது:- 

தமிழக மக்களுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தார். தமிழக மக்களுக்கு எல்லாவற்றையும் செய்யவில்லை. தமது குடும்ப மக்களுக்கு அனைத்தையும் செய்து கொண்டார். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதை போல் தற்போது முன்னாள் அமைச்சர் திகார் ஜெயிலில் உள்ளார்.  தமிழ், தமிழ் என்று கூறும் கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சினிமா துறையை ஆக்கிரமித்துக்கொண்டு அதற்கு ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்று பெயர் வைத்துள்ளது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?.  கோடிகளை வாங்கிக்கொண்டு விஜயகாந்த் கூட்டணி வைத்துக்கொண்டார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் கோடிகளுக்காக கூட்டணி வைக்கவில்லை.  மீண்டும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்பதற்காகதான் கூட்டணி வைத்தேன். சட்டம் ஒழுங்கு, மின் வெட்டு இல்லா தமிழகம், விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றுதான் கூட்டணி வைத்தேன்.  

ஒரு கதையில் வில் ஏந்திய அர்சுனனுக்கு மரத்தில் இருந்த பறவையின் கழுத்து மட்டுமே தெரிந்ததை போல் கருணாநிதி தான் தற்போது அனைவருக்கும் எதிரி. எனவேதான் கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறேன்.  அ.தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கு வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருக்கவேண்டும். எனவே கும்மிடிப்பூண்டி தொகுதியின் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர சி.எச்.சேகரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்யுமாறு பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் விஜயபிரசாத் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்