முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது

திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், ஏப்.- 30 - தூதரக உறவில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை போக்க அமெரிக்காவும் பாகிஸ்தானும் நடத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  சர்வதேச தீவிரவாத தடுப்பு போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட்டு வந்தது. பாகிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் பாகிஸ்தான் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆப்கானிஸ்தானுக்குள் தலிபான்கள் நுழைந்து அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் தலிபான்களை ஒடுக்க அமெரிக்காவே நேரடி நடவடிக்கையில் இறங்கியது. பாகிஸ்தானை கேட்காமலேயே அந்நாட்டுக்குள் ஆளில்லாத விமானங்கள் மூலம் தலிபான்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியது. மேலும் கடந்த ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பின்லேடன் இருக்கும் பகுதிக்கு சென்று அவரை சுட்டுக்கொன்று சடலத்தை அமெரிக்க படையினர் ஹெலிகாப்டரில் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். இதுபோன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகளால் பாகிஸ்தான் அரசு கடும் கோபம் அடைந்துள்ளது. தங்களைக் கேட்காமல் தங்கள் நாட்டிற்குள் விமானத் தாக்குதலை நடத்தி அமெரிக்காவுக்கு பாகிஸ்தானுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா பாகிஸ்தான் தூதரக உறவில் பிளவு ஏற்பட்டது. இந்த பிளவை சரி செய்ய இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளின் உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் மார்க் குரோஸ்மேன் பங்கேற்றார். இவர் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இரண்டு நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் இஸ்லாமாபாத்தில் இருந்து காபூலுக்கு புறப்பட்டுச் சென்றார். அமெரிக்கா நடத்திய விமான தாக்குதலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 பாகிஸ்தானிய ராணுவத்தினர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியது. ஆனால் தலிபான்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்குள் தாக்குதல்களை நடத்தி வருவதால் மன்னிப்பு கேட்க முடியாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறிவிட்டது. இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை இப்போது தோல்வியில் முடிவடைந்துள்ளதால் அமெரிக்கா பாகிஸ்தான் தூதரக உறவில் தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்