முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக தேர்ந்தெடுத்துள்ளோம்

திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஏப்.- 30 - எழுச்சி, ஆற்றல், போர்க்குணம் கொண்ட நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக தேர்ந்தெடுத்துள்ளோம் என்று மதுரை ஆதீனம் தெரிவித்தார்.   மதுரை ஆதீனம் தனது அடுத்த வாரிசாக 293வது மதுரை ஆதீன சன்னிதானமாக நித்தியானந்தாவை நியமித்தார். இதற்கான விழா ஏற்கனவே பெங்களூரு நித்தியானந்தா தியான பீடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் மதுரை ஆதீனத்திற்கு தங்க கிரீடத்தை நித்தியானந்தா அணிவித்து ஆசி பெற்றார். பின்னர் நித்தியானந்தாவிற்கு மதுரை ஆதீனம் தங்ககிரீடம், துளசிமாலையும் அணிவித்து 293வது மதுரை ஆதீனமாக முடிசூட்டினார். பின்னர் மதுரை ஆதீனம் நிருபர்களிடம் கூறியதாவது, இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மதுரை மீனாட்சிஅம்மன்கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்கள் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அவற்றை அரசு எடுத்துக்கொண்டது. மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானமாக நித்தியானந்தா சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இது திடீர் என எடுத்தமுடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்தவர்கள் அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள். சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர்க்குணம் போன்ற தகுதியுடவனாக இருக்கிறேன். இப்போது 293வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்தெடுத்துள்ளோம். சிவன்-பார்வதி ஆசியுடன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எழுச்சி, ஆற்றல், போர்குணம் கொண்ட ஒரு ஞானியை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளோம். இதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்றார்.
   பின்னர் மதுரை ஆதீனம் 293வது சன்னிதானம் நித்தியானந்தா சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது, ஆதினம் மடம் போன்றது ஒரு கடல். நான் ஒரு துளி. கடலில் கலப்பதைத்தான் துளி விரும்பும். அதைப்போலவே நான் விரும்பியே இந்த பதவியை ஏற்கிறேன். மேலும் மதுரை ஆதீனம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ளேன். மதுரை ஆதீன மடத்திற்கு குரு காணிக்கையாக ரூ. கோடி தருவதாக அறிவித்தேன். தற்போது இதை 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். மேலும் மதுரை ஆதீன மடத்தில் 24 மணிநேரமும் அன்னதானம் வழங்கப்படும். ஆதீனம் மடம் சார்பில் கல்வி நிலையங்கள் திறக்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆதீனமடத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். நடிகை ரஞ்சிதா குறித்து கேட்கிறீர்கள். அந்த சம்பவம் முழுமையான பொய். என் மீது பொறாமையின் காரணமாகவும், என்னை அழிப்பதற்காவும் இப்படி செய்தார்கள். கோர்ட்டில் நான் நிரபராதி என்று நிருபிப்பேன். தமிழ்நாட்டில் 800 தியான பீடங்கள் உள்ளது. 12 லட்சம்  பக்தர்கள் இருக்கிறார்கள். எனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்தாலும் எனது தியான பீடங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. விரைவில் 50 சன்னியாசிகள் மதுரை ஆதீனமடத்திற்கு அனுப்பப்பட்டு நிர்வாகத்தை கவனிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் இரு ஆதீனங்களும் ஊர்வலமாக மீனாட்சி அம்மன்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
   நித்தியானந்தா மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நேற்று மதியம் 1.30 மணியளவில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ஆதீன மடத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் திருஞானசம்பந்தரை பற்றி வாழ்த்து பா பாடினர். அப்போது நித்தியானந்தாவின் பக்தர்கள் நித்தியானந்தா பாடலை பாடினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு நிலைமையை சரிசெய்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்