முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சிஅம்மன் திருக்கல்யாணம் அமர்க்களமாக நடந்தது

வியாழக்கிழமை, 3 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,மே - 3 -  மதுரை மீனாட்சி அம்மன்  திருக்கல்யாணம் நேற்று அமர்க்களமாக நடைபெற்றது. இந்த காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசித்தனர்.   மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாக்களில் முக்கியமானது சித்திரை திருவிழாவாகும். அதிலும் மீனாட்சி சந்தரேசுவரர் திருக்கல்யாணம் உலக பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி அம்மன்கோவில் சித்திரை திருவிழா கடந்த 23ம்  தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் மீனாட்சியும், சுந்தரேசுவரர் -ப்ரியாவிடையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி பட்டாபிஷேகம் 30ம் தேதி இரவு நடைபெற்றது. நேற்றுமுன்தினம் மீனாட்சி அம்மன் திக்விஜயம் நடைபெற்றது.     திருவிழாவின் 10ம் நாளான நேற்று  மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்  வடக்காடிவீதியில் மலர்களால் அமைக்கப்பட்டுள்ள மணமேடையில் காலை 9.17 மணிமுதல் 9.41 மணிக்குள் மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்காக நேற்று அதிகாலை 4மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்- பிரியாவிடை வெள்ளி சிம்மாசனத்தில் மண்டகப்படிகளில் எழுந்தருளி சித்திரைவீதியில் வலம் வந்து பின் கன்னி ஊஞ்சலாடி வடக்காடி விதியில் உள்ள திருக்கல்யாண மேடைக்கு புறப்பட்டனர். காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகபெருமானும், தெய்வானையும், பவளக்கனிவாய் பெருமாளும்  மண மேடைக்கு வந்தனர். பெஙகளுரில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்களால்  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடைக்கு காலை 9 மணிக்கு அங்கயற்கண்ணி மீனாட்சியும், சுந்தரேசுவரர் பிரியாவிடையும் மணக்கோலத்தில் எழுந்தருளினர். வேத மந்திரங்கள் முழங்க குலசேகர பட்டர் வழி சிவாச்சாரியார் சுந்தரேசுரவரராகவும், உக்கிரபாண்டி பட்டர் வழி சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேடம் பூண்டிருந்தனர். மீனாட்சி அம்மன் சார்பாக உள்ள சிவாச்சாரியார் சுவாமிக்கு பாத பூஜை செய்தார். பின்னர் காப்பு கட்டிய பட்டர் மோகன் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்யம், கலச  பூஜைகள் செய்தார். கலச பூஜையில் வினாயகர், பிரம்மா, மகாவிஷ்ணு, சோமன், உமாமகேஸ்வரி தங்குவதாக ஐய்தீகம். பின்னர் பாலிகா பூஜை ஹோமம், மாங்கல்ய பூஜை போன்றவைகள் நடத்தப்பட்டு சுவாமி, பிரியாவிடை , அம்பாளுக்கு காப்பு கட்டும் வைபம் நடந்தது. பின்னர் சுமங்கலி பூஜை நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களின் துணைவியார்கள் சுமங்கலி பூஜை செய்து முளைப்பாரியில் பயறு வகைகளை தூவினர். பின்னர் சுவாமியும், அம்பாளும் மூன்று முறை மாலை மாற்றிக்கொண்டனர். சுவாமி, பிரியாவிடை மீனாட்சிஅம்மனுக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. மேள தாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு வைர திருமாங்கல்யம் பூட்டப்பட்டது. இதை அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் பிரியாவிடைக்கும் மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.   அம்மனுக்கு வைர திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட போது சுமங்கலி பெண்கள் தங்கள் கழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் மற்றும் திருமண சடங்குகள் நடைபெற்றன. பின்னர் பழைய திருக்கல்யாண மண்டபத்திற்கு சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர். அப்போது அங்குள்ள சுவாமிக்குகட்டுப்பட்ட பூதத்திற்கு திருமண விருந்து  போடப்பட்டது. திருக்கல்யாண விருந்து சாப்பிட்ட பக்தர்கள் கல்யாண மொய் எழுதினர். திருக்கல்யாணத்திற்காக வடக்காடிவீதி மற்றும் தெற்காடி வீதியில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கே பக்தர்கள் கோவிலுக்குள் குவிய தொடங்கினர். திருக்கல்யாணத்திற்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் முழுவதும் தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டு திருக்கல்யாண காட்சிகள் ஒளிபரப்பபட்டது. திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன் உள்பட அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
   பின்னர் மாலை 7 மணி அளவில் அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை அனந்தராயர் பூப்பல்லக்கில் எழுந்தருளி வலம் வந்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். இன்று காலை 6மணிக்கு திருத்தேரோடம் நடைபெறுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்