முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியில் தொடரும் மின்வெட்டால் விவசாயம்- அடியோடு பாதிப்பு- ஜெயலலிதா பேச்சு

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

முசிறி மார்ச்.- 28 - தமிழகத்தில் தி.மு.க. மைனாரிட்டி ஆட்சியில் தொடரும் மின்வெட்டால் விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி கடுமையாக பாதித்துவிட்டது என்று ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார்.  முசிறியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். முசிறி புறவழிச்சாலை ரவுண்டானாவில் தனது பிரசாரத்தை ஜெயலலிதா துவக்கினார். அப்போது அவர் கூறியதாவது:- இது சாதாரண தேர்தல் அல்ல. தமிழக மக்களுக்கு நிரந்தர விடுதலை தரவிருக்கும் தேர்தலாகும். குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காக நடக்கும் தேர்தல். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் விலைவாசி உயர வழிவகுத்து பதுக்கலுக்கு பக்கபலமாக இருந்து அரசு நிர்வாகத்தை சீர்குலைய வைத்துள்ள ஆட்சி நடந்துள்ளது. டீசல், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்பதற்கு ஆதரவு தெரிவித்து கடந்த ஒரு வருடத்திலேயே 15 முறை விலை உயர்த்தப்பட்டதற்கு கருணாநிதியே காரணமாகும். இவரது ஆட்சியில் விலைவாசி உயர்ந்து மக்கள் கஷ்டப்படுவதுதான் மிச்சமாகும். ரூ. 15-க்கு விற்ற அரிசி 42 ஆக உயர்ந்துவிட்டது. ஒரு கிலோ புளி ரூ35-ல் இருந்து 110 ஆக உயர்ந்துவிட்டது. ஒரு கிலோ பூண்டு ரூ.32-க்கு விற்றது. அது தற்போது ரூ.250 ஆக உயர்ந்துவிட்டது. தமிழகம் முழுவதும் மணல் கொள்ளகள் அமோக நடந்தது. இதனால் ரூ. 50 ஆயிரம் கோடி வரை தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 500-க்கு விற்ற ஒரு லாரி மணல் ரூ. 15 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்துவிட்டது. ரூ. 3-க்கு விற்ற செங்கல் ஒன்று ரூ. 6 ஆக உயர்ந்துவிட்டது. எனவே இனி கனவில்தான் வீடு கட்டமுடியும். மாநிலம் முழுவதும் மின்வெட்டு,தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஆரம்பத்ததிற்கு முடிவே இல்லை. இதனால் விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி அடியோடு நசிந்துவிட்டது. தற்சமயம் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியே அல்ல. ஒரு ரவுடிக்கும்பல்தான் தமிழகத்தை ஆட்சி செய்து சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்சியால் ரூ. ஒரு லட்சம் கோடி கடன் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்குதாரராக இருந்த கருணாநிதி, ரூ. ஒரு லட்சம் கோடி கொள்ளையடித்துள்ளார். இந்த பணம் அரசுக்கு கிடைத்திருந்தால் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்திருக்கும். காலாவதி மருந்து விற்பனை மணல் கொள்ளை,ரேசன் அரிசி கடத்தல் என ஊழல் ஆட்சி நடத்திவிட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி. காவல் துறையினரே கவனியுங்கள். நான் மக்களை சந்திக்க வந்திருக்கிறேன். மக்கள் என்னை சந்திக்க வந்துள்ளனர். எத்தனையோ ஊர்களில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறேன். இங்குதான் மக்களை தள்ளிவிடுகிறீர்கள். என்னை பார்க்க வந்த மக்களை சந்திக்க விடாமல் சுவர்போல் மறைத்து நிற்கிறீர்கள். என் மக்கள் என்னை பார்க்க விடுங்கள்.( இவ்வாறு போலீசாரை பார்த்து ஜெயலலிதா கூறினார்) மேலும் ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டுவதை கருணாநிதியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இந்த ஆட்சியில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். திரைப்படத்துறையிலும் கருணாநிதி குடும்பமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மொத்தத்தில் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் தி.மு.க.விடம் சிக்கி சின்னாப்பின்னப்படுத்தப்பட்டுவிட்டது. தமிழக மக்களின் பொதுவான பிரச்சினைகளை நான் அறிவேன். எம்.ஜி.ஆர். ஆசியாலும் உங்களின் நல்ல ஆதரவினாலும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்த பிறகு முசிறி பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண்போம். பாசன வாய்க்கால்கள் தூர்வாறப்படும். காவிரியில் தடுப்பணைகள் கட்டி நீர்பாசனத்திற்கு வழிவகை செய்யப்படும். மேலும் முசிறியில் ஆசிரியர் பயிற்சி பள்ளி அமைத்தது தருவோம். கனரக தொழிற்சாலை அமைக்கப்படும். துறையூர், குளித்தலை, மணச்சநல்லூர், திருவரம்பூர், லால்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை நான் அறிவேன். அப்பிரச்சினைகளை தீர்க்க நான் பாடுபடுவேன். விலைவாசி குறைக்கப்படும். அரசு ஊழியர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும். உங்களின் மனச்சாட்சிப்படி இந்த தேர்தலில் வாக்களியுங்கள். குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி, திருமண திட்டத்தின் கீழ், ரூ. 25 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும். சுய உதவி குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். அதில் 25 சதவீதம் மான்யமாக வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக 3 சென்ட் இடம் வழங்கப்படும். எனவே அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுகிறேன். அ.தி.மு.க. வேட்பாளர்கள் முசிறி தொகுதி சிவபதி, குளித்தலை தொகுதி பாப்பா சுந்தரம், துறையூர் தொகுதி இந்திரா காந்தி, மணச்சநல்லூர் தொகுதி பூனாட்சி, தே.மு.தி.க. வேட்பாளர்கள் திருவெறும்பூர் தொகுதி செந்தில்குமார், லால்குடி தொகுதி செந்துரேஸ்வரர் ஆகியோர்களுக்கு வாக்களித்து பெரும்வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்