முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய தீவிரவாதத் தடுப்புமையம் அமைப்பதை நிறுத்தி வைக்கவேண்டும்

சனிக்கிழமை, 5 மே 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 6 - தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் மாநிலங்களில் அமைப்பதை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். அது குறித்து ஆய்வு செய்ய மாநில முதல்வர்கள்   அடங்கிய துணைக்குழு அமைக்க வேண்டும் என்றும் அக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப அதை அமைக்க வேண்டும் என்றும் டில்லியில் நடந்த முதல்வர் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களில் தேசிய தீவிர வாதத்தடுப்பு மையம் அமைப்பது மாநில உரிமைகளின் விஷயத்தில் தலையிடுவதாகும் என்று தமிழக முதல்வர் ஆரம்பம் முதலே எதிர்த்து வந்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே இரண்டு முறை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.  தமிழக முதல்வர் வலியுறுத்தியது போலவே,  ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திரிணாமூல் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும் எதிர்த்தார், மேலும் பா.ஜ ஆட்சி செய்யும் குஜராத்தின் நரேந்திர மோடி, சட்டீஸ் கார் முதல்வர் ராமன்சிங், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்பட பல முதல்வர்களும் முதல்வர் ஜெயலலிதாவின் கருத்தை ஏற்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சென்ற மாதம் 16-ம் தேதி டில்லியில்  நடந்த முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா தீவிர வாதத்தடுப்பு மையம் அமைக்கும் விஷயம் குறித்து தனியாக ஒரு முதல்வர்கள் மாநாட்டை கூட்ட வேண்டும் என்று கோரியிருந்தார். அதை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டு முதல்வர்கள் மாநாட்டை நேற்று கூட்டியிருந்தார். அதில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பங்கேற்றமுதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:- டெல்லியில் கடந்த மாதம் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக நடந்த மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தின் போது, பொது அமைதி மற்றும் காவல் துறை தொடர்பாக மாநில முதலமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. அர்த்தமுள்ள அந்த விவாதங்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். தற்போது தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பான கூட்டம் நடக்கிறது. தேசிய தீவிரவாத தடுப்பு மையம் குறித்து கடந்த 3.2.2012 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் கடமைகள், அதிகாரங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது என்றாலும் மத்திய உள்துறை வெளியிட்ட உத்தரவிலோ, எங்களுக்கு வழங்கப்பட்ட தீர்மான நகல்களிலோ தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கான அவசியம் பற்றி குறிப்பிடப்படாதது ஆச்சரியம் அளிக்கிறது. மத்திய உள்துறை  அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், `கார்கில் போருக்குப் பிறகு உளவுத்துறையில் பல்நோக்கு மையம் ஏற்படுத்த வேண்டும்' என அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்தது பற்றிதான் குறிப்பிடப்பட்டுள்ளது.  உளவுத்துறைக்கு மட்டுமே அதிக அதிகாரமா?
இரண்டாவது நிர்வாக சீர்திருத்த கமிஷன் தன் பரிந்துரையில், 'உளவுத் துறையில் இருந்து மட்டும் சில அதிகாரிகளை தேர்வு செய்து தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு பதில் பல்வேறு உளவுத் துறையில் இருந்தும் அதிகாரிகளை தேர்வு செய்து ஏற்படுத்தப்பட வேண்டும்' என்று கூறி உள்ளது. என்னுடைய கருத்துப்படி பல்வேறு மாநில உளவுத் துறைகளை ஒருங்கிணைக்க முடியாத நிலையே உள்ளது. இந்த குறையை நிவர்த்தி செய்வதற்கு பதில் மத்திய உள்துறை, தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தில் 'ஆபரேஷன் டிவிசன்' ஒன்றை ஏற்படுத்த பரிந்துரைத்துள்ளது.
மேலும் உளவுத் துறையில் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் அதிகாரம் வழங்க வகை செய்யும் கூடுதல் இயக்குனர் பதவியை உருவாக்க பரிந்துரைத்துள்ளது. முரண்பாடான இந்த பரிந்துரை வழக்கத்துக்கு மாறானது என்பதோடு மட்டுமல்லாமல் அமைச்சர் குழு மற்றும் நிர்வாக சீர்திருத்த கமிஷனின் கருத்துக்களை பிரதிபலிக்காமலும் உள்ளது.
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பாக மத்திய உள்துறை வெளியிட்ட அறிவிக்கையில் பிரிவு 2.2​ன்படி, உளவுத் துறையின் கூடுதல் இயக்குனர் அந்தஸ்தில் இருப்பவரை தலைவராகவும் மற்றும் உளவுத் துறையில் இருப்பவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது இதனால் 'ரா', 'டி.ஜி.எம்.ஐ.', 'என்.சி.பி.' உள்பட மற்ற பிரிவுகளில் இருப்பவர்கள் தேசிய தீவிரவாத தடுப்பு மையக் குழுவில் இடம் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் வெளியில் இருந்துதான் செயல்பட முடியும். இதனால் அவர்கள் இரண்டாம் நிலையில்தான் இருக்க முடியும்.
மேலும் மாநில உளவுத் துறை அதிகாரிகளை இப்பணிக்கு எடுக்கும்போது தகவல் கூட தெரிவிப்பது இல்லை. இதனால் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் உளவுத் துறையின் ஆதிக்கத்துக்குட்பட்டதாகவே இருக்கும். இது தவிர இந்த மையத்துக்கு பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும் விதமானது பல்வேறு உளவுத்துறையினரிடம் பிளவை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது.
பிரதமருக்கு இது தொடர் பாக நான் 17.2.2012 அன்று எழுதிய கடிதத்தில், மாநிலத்தில் உளவுத் தகவல்களை சேகரிப்பது என்பது மாநில காவல் துறையையே சார்ந்திருக்கும். உள்ளூர் மொழி மற்றும் தீவிரவாத செயல்கள் மத்திய உளவுத் துறைக்கு புரியாததாகவே இருக்கும் என்று நான் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். எனவே உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதே சிறந்ததாக, சரியான வழியாக இருக்கும். இந்த நிலையில் உளவுத்துறையினருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து விட்டு, ராணுவ உளவுத்துறை, மாநில உளவுத் துறை போன்றவற்றை தவிர்ப்பது தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் செயல்பாடுகளை மிகவும் குறைத்து மதிப்பீடுவதாகவே இருக்கும்.
தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தில் உளவுத்துறை மட்டுமே அதிக அதிகாரங்களுடன் இருக்க செய்வது தீவிரவாதிகளின் கரங்களை வலுப்படுத்துவதாக அமைந்து விடும். 2001​ம் ஆண்டு பல்நோக்கு உளவு மையம் தொடங்கப்பட்டது. ஆனால் அதன் அதிகாரங்கள், செயல்பாடுகள் பற்றி 2008​ம் ஆண்டுதான் கூறப்பட்டது. அதன் பிறகு அமைச்சர் குழுவாலோ அல்லது மத்திய அமைச்சரவையாலோ எந்த ஆய்வும் நடத்தப்பட வில்லை. பல்நோக்கு உளவு மையத்தின் செயல்பாடுகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய எந்த பரிந்துரையும் இல்லை. குறைந்தபட்சம் அது தொடர்பான ஆய்வோ அல்லது பரிந்துரை பற்றியோ எங்களுக்கு எந்த தகவலும் தரப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், பல்நோக்கு உளவு மையத்தின் குறைகளை தீர்க்கவே தேசிய தீவிரவாத தடுப்பு மையம் உருவாக்குவதாக கூறப்படுவதால், உண்மையில் அந்த பல்நோக்கு உளவு மையத்தில் என்னென்ன குறைபாடுகள் இருந்தன என்று கூறப்பட வேண்டும். உள்துறையின் இந்த போக்கு கண்டனத்துக்குரியது.
தீவிரவாத தடுப்பு என்பது மிக முக்கியமான பிரச்சினை. இதில் எல்லா மாநிலங்கள் மற்றும் பல்வேறு உளவுத் துறையின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். தீவிரவாத தடுப்பு மையத்துக்கான அதிகாரம் உள்துறைக்கு மட்டுமே இருக்க முடியாது. நாட்டில் எங்காவது தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்கு உள்துறையின் அனுமதி பெறப்பட வேண்டும். இதனால் மற்ற அமைப்புகள் பொறுப்புகளை கை கழுவி விட முடியும். தீவிரவாதத்துக்கு எதிரான தோல்விகளில் பெரும்பாலானவை உளவுத் துறைகளிடம் ஒருங்கிணைப்பு இல்லாததையே காட்டியுள்ளது. எனவே தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் நோக்கும், திட்டம் இதை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும்.
உள்துறை அமைச்சகத்தின் காழ்ப்புணர்ச்சி:
தேசிய தீவிரவாத தடுப்பபு மையத்தை அமைப்பது, புலனாய்வு துறையின் செயலற்ற தன்மையை காட்டுகிறது.
இதுகுறித்து தமிழக அரசிடம் உள்துறை அமைச்சகம் அலட்சியப் பேக்குடன் நடந்து கெள்கிறது.
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து மத்திய அரசு தன்னிச்சையாகவே அறிவித்தது. இந்த அமைப்பில் மத்திய உளவுத்துறையான ஐ.பி.யின் ஆதிக்கமே அதிகம் இருக்கிறது. இதனால் மற்ற புலனாய்வு அமைப்புகளுடன் மோதல் போக்குதான் ஏற்படும்.
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் குறித்து மாநில அரசுகளுடன் உள்துறை அமைச்சகம் கலந்து ஆலோசிக்கவில்லை. இதன் உத்தரவு நகலைக் கூட தமிழக அரசுக்கு அனுப்பாமல் அவ்வளவு காழ்ப்புணர்ச்சியோடு மத்திய உள்துறை அமைச்சகம் செயல்படுகிறது. ஒடிசா முதல்வ நவீன்பட்நாயக் வைத்திருந்த நகலின் மூலமே எங்களுக்கு இந்த விஷயமே தெரியவந்தது. இது உள்துறை அமைச்சகத்தின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
தீவிரவாத தடுப்பு விஷயத்தில் அனைத்து உளவு அமைப்புகளும் அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். ஆனால் நமது உளவு அமைப்புகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்பதே உண்மை. எல்லைப் பகுதியில் போதிய தகவல்களைப் பெறாததால்தான் கார்கில் போர் நிகழ்ந்தது. பொதுமக்களிடம் போதுமான தகவல்களை சேகரிக்க முடியாமல் போனதால்தான் 2008​ல் மும்பை தாக்குதல் நடந்தது.
பயனற்ற  பயங்கரவாத தடுப்பு மையம்:
தற்போதைய வடிவத்தில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கப்பட்டால் அது தீவிரவாதிகளுக்குத்தான் சாதகமாக அமையும். எல்லைகளில், கடலோரங்களில் மாநில அரசுகளுடன் தகவல் பரிமாற்றம் அவசியமானதாகும். தீவிரவாத செயல் தொடர்பாக உள்ளூர் மக்கள் தகவல் தந்தால் அவர்களுக்கு தாராளமாக பரிசு வழங்கப்பட வேண்டும். அதற்கு மாநிலப் புலனாய்வு அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
தீவிரவாத நடவடிக்கைகள் பற்றி தகவல் கிடைத்தால் உடனடியாக மாநில காவல்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக மத்திய அரசின் அனுமதிக்காக  அது காத்திருப்பது என்பது தீவிரவாதத்துக்கு துணை போவதாகிவிடும். எனவே மாநில உளவுத் துறையே சுயேட்சையாக தகவல்களை திரட்ட முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த தகவல்கள் பிறகு மத்திய உளவுத்துறைக்கு கொடுக்கப்படும். எனவே தீவிரவாத நடவடிக்கைகளை எடுக்கும் முன்பு மத்திய உளவுத் துறையிடம் முன் அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை. நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் தீவிர வாத நடவடிக்கைக்கு முன்பு அனுமதி பெற வேண்டும் என்று மத்திய உள்துறை ஆசைப்பட்டால் அவர்களுக்கு நடைமுறை நிர்வாகத்தில் அறிவே இல்லை என்றுதான் நான் பயப்படுகிறேன்.
தீவிரவாத தாக்குதல் நடந்த பிறகு தோல்விக்கான காரணத்தை முதலமைச்சர்கள்தான் கூற வேண்டும். இந்த விஷயத்தில் எங்களை உற்சாகப்படுத்துவதற்கு பதில் செஸ்போர்டில் மிக குறைந்த மதிப்புடைய காயைப் போல முதலமைச்சர்களை நடத்தக்கூடாது. மத்திய உள்துறையின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது.
முதல்வர் ஜெயலலிதா அடுக்கடுக்கான கேள்வி:
இந்த நிலையில் நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். மத்திய உள்துறை நடவடிக்கையால் அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது?, உள்ளூர் மக்களுக்கு யார் பதில் சொல்வது? எனவே தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் நோக்கங்கள் உள்ளூர் நிலவரத்தை புரிந்து கொள்ளாமல் உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய உளவுத்துறை அதிகாரிகள்தான் திறமையானவர்கள் என்று மத்திய உள்துறை கருதுகிறதா? இதற்கு பதில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிரடிப் படைகளை ஏற்படுத்தலாம். சட்டம்​ஒழுங்கை நிலை நாட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஏற்கனவே உள்ளது. இதை ஏன் பலப்படுத்தவில்லை. அப்படியானால் மத்திய ரிசர்வ் போலீஸ் மீது மத்திய அரசுக்கு நம்பிக்கை இல்லையா? எல்லை பாதுகாப்பு படையை உள்ளூர் விவகாரங்களுக்கு கொண்டு வருகிறார்கள். எல்லை பாதுகாப்பு படையை ஏன் இப்படி பயன்படுத்த வேண்டும். எனவே தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்.
எனவே தற்போதைய வடிவத்திலான தேசிய தீவிரவாத் தடுப்பு மையத்தை நிறுத்தி வைக்கவேண்டும். தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான யுக்திகளை வரையறுக்க முதலமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை முதலில் அமைக்க வேண்டும்.
ஒட்டு மொத்தமாக பிரமருக்கு  நான் ஏற்கனவே எழுதிய கடிதத்தின் படி முதல்வர்கள் அடங்கிய துணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே தீவிரவாதத் தடுப்பு மையம் அமைக்க வேண்டும். அதுவரை அதை அமைப்பது குறித்து அறிவிப்பாணை வெளியிடக்கூடாது.
தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்பது மாநிலங்களின் ஒத்துழைப்புகளுடன் எடுக்கும் போது தான் அது வெற்றியடையும். தற்போது தீவிரவாதத்தடுப்பு மையம் அமைப்பதற்கு பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. பல மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் கூட இதை எதிர்த்துள்ளன. ஆகவே இதை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். எனவே முதல்வர்கள் அடங்கிய துணைக்குழு அமைக்கப் படவேண்டும். இந்த குழுவில் மாநில விவகாரங்களைக் கவனிக்கும் அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சகப் பிரதி நிதியும் பங்கேற்கலாம்.
முதல்வர்கள் அடங்கிய துணைக் குழுவின் பரிந்துரைகள் வந்தபின் அதன் அடிப்படையில் மையம் அமைப்பது பற்றிய பணிகளை மேற்கொள்ளலாம்.  
தனது சிறந்த தலைமைப் பண்பின் காரணாக மத்திய அரசு நான் கூறியக் கருத்துக்களைக் கவனித்துப் பாராட்டும் என்று நம்புகிறேன்.
இம்மாநாட்டில் சிறந்த கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டு, அதன் மூலம் பயங்கரவாதத்தை எதிர்க்கும் சிறந்த தந்திரங்களையும் யுக்திகளையும் உருவாகும் என்ற நம்பிக்கையில்தான் நான் இம்மாநாட்டிற்கு வந்துள்ளேன். தேசிய முயற்சிக்காக நாம் அனைவரும் ஒன்றுபட, சரியாக சிந்திக்கும்.
அனைத்து இந்தியர்களைப் போலவே நானும் சிந்திக்கிறேன்.
நமது நாடு ஒரு சிறந்த நாடு, ஆகையால் உலகில் சிறந்த தலைமைக்கான இடத்தை நாம் அடைய முடியும். பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு ஏதிராக திட்டமிட்ட, நிலையான பொருளாதார வளர்ச்சியின் மூலம் மட்டுமே நமது மக்களை நாம் பாதுகாக்க முடியும்.
ஆகையால் ``இந்தியா எனது நாடு, அனைத்து இந்தியர்களும் எனது சகோதர சகோதரிகள், அவர்களின் மகிழ்ச்சியில் மட்டுமே, எனது  மகிழ்ச்சி உள்ளது'' என்ற தேசிய சபதத்தின் மூலம் அந்த உணர்வின் மூலம் தேசத்திற்காக நாம் நம்மை அர்பணித்துக் கொள்வோம்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago