முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்ககுதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்

திங்கட்கிழமை, 7 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,மே.- 7 - மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் அழகர் இறங்கினார். இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து அழகரை தரிசித்தனர்.    உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைதிருவிழா சைவ, வைணவ பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இதில் முக்கிய நிகழ்வுகளான பட்டபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து மீனாட்சியையும், சுந்தரேசுவரையும் தரிசித்தனர். கடந்த 4ம் தேதி உற்சவ சாந்தியுடன் மீனாட்சி திருவிழா முடிவடைந்த நிலையில், அழகர் திருவிழா துவங்கியது. கடந்த 4ம் தேதி மாலை 6 மணிக்கு சுந்தரராஜபெருமாள் கண்டாங்கி சேலை கட்டி கையில் தடியுடனும், நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் வேடம் பூண்டு மலையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார். அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல், சுந்தர்ராஜன்பட்டி வழியாக நேற்றுமுன்தினம் காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வந்து சேர்ந்த அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து அழகரை தரிசித்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள திருக்கண்களில் எழுந்தருளிய அழகர் இரவு 10 மணிக்கு தல்லாகுளம் பிரசன்னவெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்தார். அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் அழகரை வழிபட்டனர். இங்கு அழகரை தரிசிக்க விடிய, விடிய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பின்னர் பெருமாள் திருமஞ்சனமாகி தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளினார். நள்ளிரவு 12 மணியளவில் குதிரை வாகனத்தில் சாத்துப்படியாகி,  திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு வெட்டிவேர் சப்பரத்தில் அழகர் காட்சியளித்தார்.     தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலுக்கு நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வந்த அழகர் தங்ககுதிரை வாகனத்தில் ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், அழகர் வேடம் அணிந்திருந்தவர்களும் தாரை தப்பட்டை முழங்க அழகரை வரவேற்றனர். கள்ளழகர், அனுமன் வேடமிட்டும், காவடி ஆட்டம் ஆடியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடியும் அழகரின் முன்பு பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். வைகை ஆற்றுக்குள் உள்ள வெள்ளம் கரைக்கு வந்து விட்டது போல  தல்லாகுளத்தில் இருந்து வைகை ஆறுவரை மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து வந்த படி ஜொலிக்கும் தங்ககுதிரை வாகனத்தில் அழகர் வந்தது பார்ப்பவர்களை பரவசமடைய செய்தது. மூங்கில் கடை வீதியில் உள்ள பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளிய அழகர் காலை 5.30 மணிக்கெல்லாம் வைகை கரையில் உள்ள கடைசி மண்டகப்படிக்கு வந்து விட்டார்.  முன்னதாக அழகரை வரவேற்பதாக வெள்ளைக்குதிரை வாகனத்தில் வந்த வீரராகவபெருமாள் வைகை ஆற்று பந்திலில் காத்திருந்தார். அழகரை தரிசிக்க தென்மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து 10 லடசத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வைகை ஆற்றில் திரண்டு இருந்தனர். வைகை ஆற்றுக்குள்ளும், வைகை கரை ஓரமும் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. வைகை ஆற்றில் தண்ணீர் வெள்ளத்திற்கு பதில் மக்கள்வெள்ளம் வந்து விட்டதோ என்று பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது. மேலும் வைகை ஆறு மட்டுமின்றி ஏவி மேம்பாலம், கல்பாலம், பிடிஆர் பாலம், வைகை கரையின் வட, தென்பகுதி என எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாகவே காட்சியளித்தது. வைகையில் அழகர் இறங்குவதற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இந்த தண்ணீர் நேற்றுமுன்தினம் காலையிலேயே மதுரைக்கு வந்து அழகரை காண்பவர்களுடன் தன்னையும் இணைத்துக்கொண்டது. இந்த தண்ணீருக்குள் நின்றபடி அழகரை தரிசிக்க பக்தகோடி பெருமக்கள் குழந்தை, குட்டிகளுடன் காத்துக்கொண்டிருந்தனர். கோடானு கோடி கண்கள் அழகர் பாதையையே பார்த்துக்கொண்டிருக்க வான வெடி சத்தத்துடன் காலை 5.50மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களின் வெள்ளத்தில் வைகை ஆற்றுக்குள் இறங்கினார் அழகர். இதை திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா என்ற கோஷத்துடன் அழகரை தரிசித்தனர். ஏராளமானோர் செம்புகளில் இனிப்பை வைத்து சூடம் ஏற்றி அழகரை நோக்கி பூஜை செய்தனர்.

   வைகை ஆற்றுக்குள் இறங்கிய அழகரை வீரராகவ பெருமாள் பந்தலுக்குள் இருந்து வெளியே வந்து வரவேற்றார். பின்னர் அழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பூஜை முடிந்ததும் ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த பந்தலை மூன்று முறை சுற்றிவந்து நாலாபக்கமும் திரண்டு இருந்த பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 7.05 மணிக்கு வைகை ஆற்றுக்குள் இருந்து அழகர் புறப்பட்டார். வைகை கரையோரம் உள்ள திருக்கண்களில் அழகர் எழுந்தருளி விட்டு 12 மணிக்கு ராமராயர்  மண்டகப்படிக்கு வந்தார். அங்கு அழகர் மீது தண்ணீரை  பீய்ச்சி அடிக்கும் தீர்த்தவாரிக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தண்ணீர் பையுடன் காத்திருந்தனர். அவர்கள் அழகரின் முகத்தை பார்த்ததும் பரவசம் அடைந்து அழகரை நோக்கி தண்ணீரை நோக்கி பீய்ச்சி அடித்தனர். இதன் பின்னர் மதியம் 2 மணிக்கு இங்கிருந்து புறப்பட்ட அழகர் அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலை அடைந்தார். இங்கு விடிய,விடிய பக்தர்கள் திரண்டு வந்து அழகரை வழிபட்டனர். இன்று காலை 7 மணிக்கு அழகர் கருட வாகத்தில் எழுந்தருளி பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபகப்படிக்கு வருகிறார். இங்கு சேஷவாகனத்தில் எழுந்தருளி மண்டூகமுனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். இங்கிருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் அழகர் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளிவிட்டு இரவு 10 மணிக்கு ராமராயர்மண்டகப்படிக்கு வருகிறார். இங்கு விடிய, விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளைமறுநாள் காலை மோகினி அவதாரத்தில் அழகர் புறப்படுகிறார். அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியான நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மதுரை போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர், டிஐஜி பாலநாகதேவி, எஸ்பி அஸ்ராகார்க், நகர் போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் 22 உதவி கமிஷனர்கள், 40 இன்ஸ்பெக்டர்கள், 300 எஸ்ஐக்கள்  உள்பட 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வைகை ஆறு, கோரிப்பாளையம் உள்ளிட்ட 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கூட்டத்தை கண்காணித்தனர். மொத்தத்தில் இதுவரை எந்த வருடமும் இல்லாத அளவிவிற்கு இந்த வருடம் கூட்டம் அதிகம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

-----

டிசி பாக்ஸ்

--------

மாவட்ட நிர்வாகம்- மாநகராட்சிக்கு

பொதுமக்கள் பாராட்டு

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என்பதற்காக கடந்த சில நாட்களாக கலெக்டர் சகாயம், மேயர் ராஜன்செல்லப்பா, போலீஸ்கமிஷனர் சஞ்சய்மாத்தூர், எஸ்பி அஸ்ராகார்க் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை எந்த குறையும் இன்றி செய்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் சகாயம், மேயர் ராஜன்செல்லப்பா ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தனர். இந்த தீவிர நடவடிக்கையால் நேற்று பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முழுமையாக செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக எங்கு பார்த்தாலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இதே போல போலீசாரின் தீவிர நடவடிக்கையால் ஒரு சிறு அசம்பாவிதம் கூட இன்றி பக்தர்கள் மகிழ்ச்சியாக அழகரை தரித்து விட்டு ஊர் திரும்பினர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

-----

பச்சை பட்டில் அழகர்

நாடு செழுமை அடையும்

வைகை ஆற்றுக்குள் இறங்கும் அழகர் என்ன கலர் பட்டு உடுத்தி இறங்க போகிறார் என பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துஏ இருந்தனர். அழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கியதும் அழகரின் முகத்தை தரிசித்த பக்தர்கள் அடுத்து அவர் என்ன பட்டு உடுத்தி இருக்கிறார் என ஆவலுடன் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர். நேற்று வைகை ஆற்றில் இறங்கிய அழகர் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார். பச்சை பட்டு செழுமையை தரும். நாடு சுபீட்சம் பெரும். விவசாயம் செழிக்கும் என தெரிவித்தனர்.

---

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்