முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளத்திலிருந்து எங்களுக்கும் கூடுதல் மின்சாரம் வேண்டும்

திங்கட்கிழமை, 7 மே 2012      இந்தியா
Image Unavailable

 

டெல்லி, மே - 7- கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து எங்களுக்கு 500 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேரளா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்துடன் மோதும் வகையில் இந்த கோரிக்கையை அந்த மாநில அரசு விடுத்துள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உள்ளிட்டவற்றில் தமிழகத்துடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் கேரள அரசு, தற்போது கூடங்குளம் விவகாரத்திலும் தமிழகத்துடன் மோதலைத் தொடங்குவதாகத் தெரிகிறது. கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 2 முறை கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இந்த நிலையில் ஏட்டிக்குப் போட்டியாக கேரள அரசும், பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 500 மெகாவாட் மின்சாரத்தை கேரளாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.  கடந்த மே 3ம் தேதி கேரள முதல்வர் உம்மன்சாண்டி பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், கேரளாவில் மின்சார நிலைமை மோசமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கூடங்குளத்திலிருந்து அதிக அளவிலான மின்சாரத்தை கேரளாவுக்கு ஒதுக்குவது குறித்து சிறப்பான முறையில் பரிசீலிக்க வேண்டும். கேரளாவில் உற்பத்தியாகும் நீர் மின்சாரம்  மாநிலத்தின் தேவையை தீர்க்கும் வகையில் இல்லை. எனவே கூடங்குளத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் முதல் மின் உற்பத்தி அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. 2-வது உற்பத்திப் பிரிவு அடுத்த சில மாதங்களில் இயங்கத் தொடங்கலாம். தற்போதைய திட்டப்படி இரண்டு மின் உலைகளும் இயங்கத் தொடங்கும்போது தமிழகத்திற்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். கேரளாவுக்கு 266 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால் கேரளாவுக்கு 500 மெகாவாட் மின்சாரம் வழங்க  வேண்டும் என்று உம்மன் சாண்டி கோரியிருப்பது  குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்