முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். வீரர்களுக்கு பாக். மந்திரி எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மார்ச் 29 - சூதாட்டம்  மற்றும் லஞ்சம் போன்ற  நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மாலிக்  கிரிக்கெட் வீரர்களை எச்சரித்துள்ளார்.

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அரை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் முதல் அரையிறுதி போட்டி இலங்கையில் இன்று  நடைபெறுகிறது. இதில் இலங்கை அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதி போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் நாளை மொகாலியில் மோத உள்ளன. உலக கிரிக்கெட் ரசிகர்களே ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த போட்டியைக் காண வருமாறு இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி இந்தியா வரவுள்ளார். 

இந்நிலையில் அரை இறுதி போட்டியில் கலந்துகொள்ளும் பாகிஸ்தான் வீரர்களுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்த மிக முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் மிக கவனமாக நடந்துகொள்ள வேண்டும். பாக். வீரர்கள் மிக நெருக்கமாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தவறு செய்யும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்  எச்சரித்துள்ளார். தற்போது அணியில் உள்ள வீரர்கள் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியவர்கள் அல்ல என்று தெரிவித்த அவர், இருந்தாலும் எந்த தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் பாகிஸ்தான் மிகவும் கவனமாக உள்ளது என்றார். உளவுத் துறை அதிகாரிகள் பாகிஸ்தான் வீரர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்பதையும், யார் யார் அவர்களை சந்திக்கிறார்கள் என்பதையும் கவனித்து வருவதாகவும், வீரர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளும் கண்காணிக்கப்படுவதாகவும் மாலிக் தெரிவித்தார். கடந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றபோது பாகிஸ்தான்  வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு மூன்று வீரர்கள் இந்த பிரச்சனையில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒழுங்கீனங்களுக்கு  இந்த முறை வாய்ப்பு கொடுக்க கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

மாலிக் மேலும் தெரிவிக்கையில், பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான பயிற்சிகளை மேற்கொள்வதுடன், சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரத்தில் எழுந்து தங்கள் உடல் தகுதியை நன்றாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் தாய்நாட்டில் உங்கள் வெற்றியை ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். பாக். வீரர்கள் எங்களுக்கு இந்த வெற்றியை பெற்றுத்தருவார்கள்.  நாங்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறோம். பாகிஸ்தான் வீரர்கள் எங்களை ஏமாற்ற மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை பாகிஸ்தான் அணி இந்திய அணியை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்