சிரஞ்சீவியின் மருமகன் வீட்டில் வருமானவரி சோதனை

Image Unavailable

 

சென்னை, மே.12 - சென்னையில் உள்ள தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் வீட்டில் வருமான வரி அதிகாரி நள்ளிரவு வரை சோதனை நடத்தினார்கள். இதுகுறித்த விபரம் வருமாறு;-  தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஷாவும் என்ஜினீயரிங் படித்து வந்த சிரிஷ் பரத்வாஜும்  கடந்த 2007​ம் ஆண்டு வீட்டை விட்டு ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொண்டனர். சிரிஷ் பரத்வாஜை நான்கு வருடமாக காதலிப்பதாகவும் காதலை பெற்றோர் ஏற்காததால் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் ஸ்ரீஷா தெரிவித்தார். இதனால் சிரஞ்சீவி அதிர்ச்சியானார். மகளை வீட்டில் சேர்க்கவில்லை. 

ஸ்ரீஷா கணவர் வீட்டிலேயே குடியேறினார். சில மாதங்களுக்கு பின் சிரஞ்சீவி குடும்பத்தினர் சமரசம் ஆனார்கள். மகளையும் மருமகனையும் தங்களோடு சேர்த்துக் கொண்டனர். இதற்கிடையில் ஸ்ரீஷாவுக்கும் சிரிஷ் பரத்வாஜுக்கும் இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிரிஷ் தன்னை வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைபடுத்துவதாக ஸ்ரீஷா குற்றம்சாட்டினார். ரூ.1 1/2 கோடி வரதட்சணை கேட்பதாக அவர் கூறினார். இதுகுறித்து போலீசிலும் புகார் செய்தார். அத்துடன் விவாகரத்து கேட்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். 

இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள சிரிஷ் பரத்வாஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அவர்கள் நேற்று முன்தினம் இரண்டு கார்களில் வந்தார்கள். இரவு 7 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை சிரிஷ் பரத்வாஜ் வீட்டில் சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்த தஸ்தாவேஜுகளை கைப்பற்றி காரில் எடுத்துச் சென்றனர். 14 அதிகாரிகள் இந்த சோதனையில் பங்கேற்றனர். என்னென்ன  ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்ற விவரத்தை அவர்கள் வெளியிடவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ