முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. மேல்சபை உறுப்பினராக அகிலேஷ் யாதவ் பதவியேற்றார்

திங்கட்கிழமை, 14 மே 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ, மே - 15 - உத்தரபிரதேச மாநில மேல்சபை உறுப்பினராக அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் எதிர்பாராத விதமாக சமாஜ்வாடி கட்சி மகத்தான வெற்றிபெற்றது. இதையடுத்து இம்மாநில முதல்வராக வழக்கம்போல் முலாயம் சிங் யாதவ் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனார் அவரது கட்சியினரோ, முலாயம்சிங்கின் மகன் அகிலேஷ் யாதவே முதல்வராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து கட்சியினரின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் தன் மகன் அகிலேஷ் யாதவுக்கு முடிசூட்டினார் முலாயம்சிங் யாதவ். அதன் படி உ.பி.  முதல்வராக அகிலேஷ் யாதவ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அகிலேஷ் யாதவ் பதவியேற்றபோது அவர் அம்மாநிலத்தின் மேல்சபையிலோ அல்லது கீழ் சபையிலோ உறுப்பினராக இல்லை. முதல்வராக பதவியேற்கும் ஒருவர் 6 மாதத்திற்குள் ஒன்று எம்.எல்.ஏ. ஆகவேண்டும் அல்லது எம்.எல்.சி. ஆகவேண்டும். இந்த நிலையில்தான் உத்தரபிரதேச மாநிலத்தில் அம்மாநில மேல்சபைக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் கிட்டத்தட்ட 13 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் அகிலேஷ் யாதவ். இவர் உள்பட 8 பேர் சமாஜ்வாடி கட்சியில் இருந்து எம்.எல்.சி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 3 பேர் மாயாவதி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ஒருவரும் அஜித்சிங் கட்சியில் இருந்து ஒருவரும் எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலேஷ் யாதவ், நேற்று மேல்சபை உறுப்பினராக முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். மேலும் 9 பேரும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் மாயாவதி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேர் நேற்று பதவியேற்க வரவில்லை. எம்.எல்.சியாக பதவியேற்ற அகிலேஷ் யாதவிற்கு வாழ்த்துக்கள் குவிந்தன. மேல்சபையில் முதல்முறையாக காலெடுத்து வைத்துள்ளார் அகிலேஷ் யாதவ். முதல்வராக பதவியேற்றபிறகு இவர் தனது கன்னோஜ் லோக்சபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்