முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உண்டு

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச் 29 - தேர்தல் நடைபெறும்போது மாநில அரசு அதிகாரிகளை மாற்ற தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உண்டு, இதுகுறித்து மாநில அரசுக்கு தகவல் தர அவசியமில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

தேர்தல் ஆணையத்தின் வாகன சோதனையை எதிர்த்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் தாமாக முன்வந்து எடுத்த `சூமோட்டோ' வழக்கை ஐகோர்ட் தலைமை நீதிபதியின் முதன்மை பெஞ்ச் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. 

தமிழகத்தில் வாகன சோதனையில் இதுவரை பறிமுதல் செய்த 23 கோடி ரூபாயை திரும்ப கேட்டு யாரும் வரவில்லை என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞர் பரபரப்பு தகவலை கொடுத்துள்ளார். 

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

வாகன சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்கிறது. ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணத்தை பறக்கும் படை அதிகாரிகல் பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கிறார்கள். உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை  திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையின் தொடர் நடவடிக்கை காரணமாக தேர்தலில் பணநடமாட்டம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்க நினைக்கும் அரசியல்கட்சிகள் திண்டாடி வருகின்றன. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கூறினார். அதேபோல் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பல்வேறு பொதுக் கூட்டங்களிலும் கருணாநிதி பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை நடராஜன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்தார். அதன் மீதான விசாரணை ஐகோர்ட் நீதிபதிகள் எலிப்பி தர்மராஜ், எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. 

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தனது மனுவில் வாகனங்களில் மக்கள் கொண்டு செல்லும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறியிருந்தார். 

கடந்த 23-ந் தேதி இந்த வழக்கில் நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். நம்பகமான தகவல் அடிப்படையில்தான் தேர்தல் ஆணைய பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள். அன்றைய தினத்தில் தி.மு.க.வை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி வீட்டில் தேர்தல் ஆணைய பறக்கும்படை அதிகாரிகள் 3 மணி நேரம் சோதனை நடத்தியும் எதையும் கைப்பற்றப்படவில்லை என்பது தொடர்பாகவும் நீதிமன்றத்தில்  பிரச்சினை எழுப்பப்பட்டது. கே.பி.பி.சாமி சார்பில் வழக்கறிஞர் விடுதலை ஆஜரானார்.  தில்லை நடராஜன் தொடர்ந்த வழக்கோடு கே.பி.பி.சாமியின் வழக்கும் சேர்த்து விசாரிக்கப்பட்டது. அதேபோல் டி.ஜி.பி. இடமாற்றம் குறித்தும் அன்றைய தினமே விசாரிக்கப்பட்டது.  அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.  மேலும், இந்த வழக்குகளில் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியிருந்தனர். 

இந்த சூழ்நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதிகள் எலிப்பி தர்மராஜ், எம்.வேரணுகோபால் ஆகியோர் அடங்கிய  பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜரானார். அவர் பேசும்போது, தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வேண்டும். அந்த அதிகாரத்திற்கு இடையூறாக இருந்த போலீஸ் அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். நாளொரு மேனியாக பண பறிமுதல் செய்யப்படும் செய்திகள் தொலைக்காட்சிகள் மூலமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை அதிகாரிகள் இதுவரை தமிழகத்தில் 23 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். அதை திரும்ப கேட்டு இதுவரை யாரும் வரவில்லை. இதுபோன்ற சமயத்தில் தேர்தல் ஆணையத்திற்கு குறிப்பிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அதிகாரம் உண்டு. அதுமட்டுமல்லாமல் அதிகாரிகள் இடமாற்றம் குறித்து மாநில அரசுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் தேர்தல் ஆணையத்திற்கு  இல்லை என்றார். 

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பேசும்போது, இந்தியா முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் என்னென்ன விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றுகிறதோ அதைத்தான் தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு கோருகிறது என்று கூறினார். தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் கூறும்போது, தேர்தல் ஆணையத்தால் சரிவர தனது பணியை செய்ய முடியாத காரணத்தால் தான் டி.ஜி.பி. லத்திகாசரனை தன்னிச்சையாக இடமாற்றம் செய்ய வேண்டியது இருந்தது என்றார். 

இருதரப்பு  வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை நாளை (இன்று) ஒத்திவைக்கிறோம் என்று தெரிவித்தனர். 

தேர்தல் ஆணையம் நடத்தும் வாகன சோதனையை எதிர்த்து கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை ஐகோர்ட் நீதிபதிகள் எலிப்பி தர்மராஜ், எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தானாக முன்வந்து `சூமோட்டோ' வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது நம்பகமான தகவல்கள் இல்லாமல் வாகன சோதனை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த உத்தரவு பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு சர்ச்சையையும் உருவாக்கியுது. ஐகோர்ட் நீதிபதிகள் ஏதாவது ஒரு முக்கியமான விஷயம் பற்றி தமக்கு தாமாகவே முன்வந்து சூமோட்டோ ரிட் பெட்டிஷனை எடுத்துக்கொண்டு விசாரிப்பதற்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும் அப்படி சூமோட்டோ வழக்கை எடுப்பதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல் நெறிமுறைகளுக்கும் உயர்நீதிமன்றத்தின் நிபந்தனை மற்றும் விதிகளுக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும். 

ஐகோர்ட் நீதிபதிகள் ஒரு ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்ட ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி சூமோட்டோ வழக்காக எடுப்பதாக இருந்தால் அதை தலைமை நீதிபதியின் பார்வைக்கு எடுத்துச் சென்று வழக்கின் தன்மை குறித்து தீவிர ஆய்வு செய்த பின்னரே அதை சூமோட்டோ வழக்காக எடுக்கலாம் என்ற முடிவுக்கு வர வேண்டும். 

மேலும் சூமோட்டோ வழக்கின் தன்மையானது சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் மற்றும் ஐகோர்ட்  நெறி முறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதியின் அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் கமிஷனின் வாகன சோதனை குறித்து நீதிபதிகல் எலிப்பி தர்மராஜ், எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் எடுத்துக் கொண்ட சூமோட்டோ வழக்கு குறித்து தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்சி நேற்று விசாரணை நடத்தியது. 

தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் விசாரணை நடத்தியது. அவர்கள் சூமோட்டோ வழக்கை ரத்து செய்வதாக  அறிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்