முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு வாய்ப்பு தாருங்கள் - ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மார்ச் 29 - ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில்  அறிவித்த மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், இலவச அரிசி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உங்கள் வீடுதேடி கொண்டுவந்து சேர்க்கும் வாய்ப்பை இந்த தேர்தலில் எனக்கு தாருங்கள் என்று சாத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மாணவரணி மாநிலச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார், சாத்தூர் தொகுதி முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார். சாத்தூர் நகராட்சி பகுதிகளில் ஆர்.பி.உதயகுமார் வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டு வருகிறார். அப்போது பெண்கள் பூரணகும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து வெற்றித் திலகமிட்டு வேட்பாளரை வரவேற்று வருகிறார்கள். குறிப்பாக நகரத்தில் உள்ள இளைஞர்கள், சட்டம் படித்த வேட்பாளர் உதயகுமாரை மாலையணிவித்தும், சால்வை அணிவித்தும் தங்களது ஆதரவை தெரிவித்து களப்பணியினை தீவிரமாக செய்துவருவதாக தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் அ.தி.மு.க. வேட்பாளர் உதயகுமாரை தங்கள் வீட்டு பிள்ளைபோல  தங்களது வீட்டுக்குள் அழைத்து தங்களின் ஆதரவை தெரிவித்து, வாழ்த்தி வரவேற்று வருகிறார்கள். குறிப்பாக நகர்ப்பகுதி முழுவதும் பொதுமக்கள்  ஆர்.பி.உதயகுமார் செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். எங்களது ஓட்டு இந்த முறை இரட்டை இலைக்குத்தான் என்று வாக்குறுதியும் அளித்து வருகிறார்கள். 

இந்த பிரச்சாரத்தின்போது வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

இந்த தாய்த் தமிழ்நாட்டை கொள்ளையடித்துவரும் கருணாநிதியின் கூட்டத்திற்கு இந்த தேர்தலில் நீங்கள் ஒரு நிரந்தர முடிவு கட்டவேண்டும். இதற்காகத்தான் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு வெற்றிக்கூட்டணியை உருவாக்கி உள்ளார். இந்த கூட்டணி கண்ணீர்க் கடலில் தத்தளித்துவரும் என் தாய்த் தமிழ் மக்களை உறுதியாக கரைசேர்க்கும். எனவே எதற்கும் அஞ்சாமல் வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் இந்தத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மனிதப் புனிதன் எம்.ஜி.ஆரின் வெற்றிச் சின்னமான இரட்டை இலைக்கு வாக்களித்து மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சர் அரியணையில் ஜெயலலிதாவை அமர்த்த வேண்டும். அதன்மூலம் கேடுகெட்ட, மக்கள் விரோத கருணாநிதியின் தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். 

வரும் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு நீங்களெல்லாம் வாக்களித்து அமோக வெற்றிபெற செய்வதன் மூலம் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா வருவார். அப்போது அவர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ள இலவச மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர், 20 கிலோ அரிசி, முதியோர் பென்சன், மாணவர்களுக்கான மடி கணினி போன்ற பல்வேறு நலத் திட்டங்களை உங்களது வீடுகளுக்கு கொண்டுவந்து சேர்க்கும் வாய்ப்பை இந்த தேர்தலில் எனக்கு தாருங்கள். சாத்தூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஆர்.பி.உதயகுமாராகிய என்னை நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக்கினால் நான் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் உங்களுடைய வீடுகளுக்கு கொண்டுவந்து சேர்ப்பேன். உங்களது பகுதிகளில் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை உடனடியாக செய்து முடிப்பேன். தேர்தல் பிரச்சாரத்தின்போது மட்டுமல்ல, எப்போதும் உங்கள் பகுதிக்கு ஓடோடி வந்து உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பேன் என்று உறுதி கூறுகிறேன். எனவே பொதுமக்களாகிய நீங்கள் இந்த தேர்தலில் சிந்தித்து இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள். 

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரச்சாரத்தின்போது தொகுதி செயலாளர் சேதுராமானுஜம், சாத்தூர் நகர செயலாளர் வாசன், நகர மாணவரணி செயலாளர் செல்வகணேஷ், மாவட்ட மகளிரணி செயலாளர் கெளரி, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் மணிகண்டன், சாத்தூர் ஒன்றிய செயலாளர் சுப்புராம், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், மாவட்ட பாசறை செயலாளர் தினேஷ்பாபு, மாவட்ட கழக துணைச் செயலாளர் மாரியம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்