Idhayam Matrimony

மைலாப்பூர் தொகுதி - ஜெயந்தி தங்கபாலு மனு தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச் 29 - மைலாப்பூர் தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயந்தி தங்கபாலுவின் மனுவை ஆவணங்கள் சரி இல்லை என்று கூறி தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். ஆனால் நேற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்திருந்த தங்கபாலு மனுவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்த விபரம் வருமாறு:-

வேட்பு மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டன. மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட மனுதாக்கல் செய்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவின் மனைவி ஜெயந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அத்தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. 

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 13-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. 26-ந் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. வேட்புமனுக்கள் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் அனைத்து வேட்பு மனுக்களும் பரிசீலிக்கப்பட்டன. சென்னையில் மயிலாப்பூர் தொகுதிக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை திருவல்லிக்கேணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

மயிலாப்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக கே.வி.தங்கபாலு மநு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் நேற்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்த மயிலை சிவகாமி, தேர்தல் அதிகாரி இன்னொசென்ட் திவ்யாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். 

அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:-

மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வேட்புமனு  தாக்கல் செய்துள்ள ஜெயந்தி, தேர்தல் அதிகாரி முன் தாக்கல் செய்துள்ள வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் பல்வேறு உண்மைகளையும், தகவல்களையும் வேண்டுமென்றே மறைத்துள்ளார். சென்னையில் இருந்து வெளிபரப்பாகும் மெகா டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஜெயந்தி உள்ளார் என்று கே.வி.தங்கபாலுவே பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தகவலை தனது பிரமாண பத்திரத்தில் ஜெயந்தி மறைத்து விட்டார். 

ஜெயந்தி நிர்வாக இயக்குநராக உள்ள மெகா டி.வி. நிறுவனத்தில் தங்கபாலு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பங்குகள் உள்ளன. இந்த தகவல்களும் வேட்புமனுவில் குறிப்பிடப்படவில்லை. மெகா டி.வி. நிறுவனர், நிர்வாக இயக்குநர் ஜெயந்திக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னொரு டி.வி. நிறுவனம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதேபோல், எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முன் மெகா டி.வி.க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. 

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் தங்கபாலுவுக்கு சொந்தமான தங்கவேல் பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு ரூ.600 கோடி ஆகும். அந்த கல்லூரியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திலேயே இது சம்பந்தப்பட்ட விவரங்கள் உள்ளன. இந்த விவரங்களையும் ஜெயந்தி தனது பிரமாண பத்திரத்தில் மறைத்து விட்டார். தவறான தகவல்களையும் கொடுத்து வேண்டுமென்றே உண்மைகளை மறைத்து ஜெயந்தி வேட்புமனு தாக்கல் செய்திருப்பது வாக்காளர்களை ஏமாற்றுவதாகும். ஆகவே, அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.  இவ்வாறு அந்த புகார் மனுவில் மயிலை சிவகாமி குறிப்பிட்டிருந்தார். 

மயிலாப்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தவர்களின் மனுக்கள் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தேர்தல் அதிகாரி இன்னொசென்ட் திவ்யா வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார். இதையொட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, தி.மு.க. பகுதி செயலாளர் த.வேலு இருவரும் வந்தனர். வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரி இன்னொசென்ட் திவ்யா பரிசீலனை செய்தார். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். மாற்று வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த தங்கபாலுவின் மனு ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். 

வேட்புமனு பரிசீலனை முடிந்ததும் கே.வி.தங்கபாலு வெளியில் வந்தார். அப்போது நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு தங்கபாலு பதில் அளிக்க மறுத்து விட்டார். இப்போது நான் எதுவும் சொல்ல மாட்டேன், மீண்டும் வருவேன், அப்போது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் என்றார். நிருபர்கள் விடவில்லை. தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். வேறு வழியில்லாமல் தங்கபாலு பதில் அளிக்க தொடங்கினார். 

அவர் கூறியதாவது:-

எனது மனைவி ஜெயந்தி மயிலாப்பூர்  தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 4 ஆவணங்கள் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தி.மு.க. பகுதி செயலாளர் த.வேலு, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மங்கள்ராஜ், தென்சென்னை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் செயலாளர் இளஞ்செழியன், பா.ம.க. கவுன்சிலர் ஜமுனா ஆகியோரது முன்னிலையில் 4 ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. 4 ஆவணங்களும் சரியாக இருப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், தாக்கல் செய்யப்பட்ட 4 ஆவணங்களில் 2 ஆவணங்களை காணவில்லை என்று கூறுகிறார்கள். 2 ஆவணங்களில் கையெழுத்து போடவில்லை என்று கூறுகிறார்கள். மாற்று வேட்பாளராக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை ஏற்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர். 

ஆகவே, மயிலாப்பூரில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவது உறுதி. தேர்தல் கமிஷனின் குறைபாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன். இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் எனது மனைவி ஜெயந்தி புகார் கொடுக்க இருக்கிறார். எனது மனைவி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அப்பட்டமான பொய். அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை, எந்த வழக்கும் தொடரப்படவில்லை, எந்த வழக்கும் நிலுவையிலும் இல்லை. இவ்வாறு தங்கபாலு கூறினார். 

தங்கபாலு காரில் ஏறி புறப்பட்டபோது, சுயேட்சை வேட்பாளர் மயிலை சிவகாமி தங்கபாலுவை எதிர்த்தும், அவரது மனைவி ஜெயந்தியை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினார். அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு பதில் மாற்று வேட்பாளராக அந்த தொகுதியை சேர்ந்தவர்தான் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் தங்கபாலு மாற்று வேட்பாளராக தனது பெயரை அறிவித்துக் கொண்டதும், வேட்புமனு செய்ததும் கண்டிக்கத்தக்கது. கட்சி மேலிடத்தின் உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக அவர் செயல்படுவதை ஏற்க முடியாது என்று  மயிலை சிவகாசி கூறினார்.   

தொடர்ந்து அவரும், அவரது ஆதரவாளர்களும் தங்கபாலுவுக்கு எதிராக கோஷம் எழுப்பியது அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவேசம் அடைந்த தங்கபாலுவை சமாதானப்படுத்தி அவரது ஆதரவாளர்கள் அவரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு அடங்கியது. பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட போலீசார் அமைதியுடன் அங்கு நடந்த சம்பவங்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்