முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.54 உயர்வு...!

புதன்கிழமை, 23 மே 2012      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.24  - பெட்ரோல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.7.54 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயத்தில் டீசல், கியாஸ், மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும் இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து வருவதாலும் இறக்குமதி செலவு அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் எண்ணெய் கம்பெனிகளுக்கு ஒரு நாளைக்கு 495 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுக்கொண்டியிருந்தது. அதனால் எண்ணெய் விலையை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசை எண்ணெய் கம்பெனிகள் கேட்டுக்கொண்டன. ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற கூட்டம் ஆகியவைகள் காரணமாக பெட்ரோல்,டீசல், கியாஸ் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு தயக்கம் காட்டி வந்தது. 5 மாநில தேர்தல் முடிந்துவிட்டதாலும், பாராளுமன்ற கூட்டத்தொடரும் முடியும் தருவாயில் இருப்பதாலும் பெட்ரோல் விலையை எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.7.54 பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு பிறகு இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.7.54 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.5 உயர்த்தப்பட்டது.
புதிய விலை உயர்வுப்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73.18 பைசாவாக இருக்கும். மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.70.66 பைசாவில் இருந்து ரூ.78.57 பைசாவாக உயரும். கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.7.85 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.88 பைசாவாக இருக்கும். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.7.98 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இனிமேல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.53 பைசாவாக இருக்கும். நேற்றுமுன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்பால் ரெட்டி,ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டதாலும் கச்சா எண்ணெய் விலை 14.5 சதவீதம் உயர்ந்துவிட்டதாலும் பெட்ரோலிய பொருட்களின் விலையை உடனடியாக கூட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார். அவர் சொன்ன மறுநாளே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுவிட்டது. ஆனால் டீசல் , கியாஸ், மண்ணெண்ணெய்  விலை உயர்த்தப்படவில்லை. இதற்கு காரணம் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான உயர்மட்டக்கமிட்டி கடந்த ஓராண்டு காலமாக கூட வில்லை. இந்த உயர்மட்ட கமிட்டியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளான திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. ஆகியவைகள் இடம் பெற்றுள்ளன. டீசல், கியாஸ், மண்ணெண்ணெய் விலை கடைசியாக கடந்தாண்டு ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏழைகளின் கண்ணீர் சும்மாவிடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்