முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்வி பயத்தால் வன்முறையை கட்டவிழ்த்துவிட கருணாநிதி சதித்திட்டம் - ஜெயலலிதா திடுக்கிடும் தகவல்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

திருவாரூர், மார்.- 30 - தோல்வி பயத்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட கருணாநிதி சதித் திட்டம் தீட்டியுள்ளார் என்று திருவாரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். நேற்று செம்பனார்கோவில், திருவாரூர், புவனகிரி,கடலூர், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். திருவாரூரில் நடந்த பிரச்சாரத்தில் அ.தி.மு,க வேட்பாளர்கள் குடவாசல் ராஜேந்திரன், காமராஜ், ராஜநாயகம், உலகநாதன் ஆகியோர்களை ஆதரித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் பேசியதாவது, சர்வாதிகாரி ஆட்சிக்கு எதிராக எகிப்தில் வெடித்த மக்கள் புரட்சியைப்போல் கருணாநிதி குடும்ப ஆட்சிக்கு எதிராக நீங்கல் எல்லாம் இங்கே எழுச்சியுடன் கூடி இருக்கிறீர்கள். பிறரை வாழவைப்பவர்கள் தமிழர்கள். வாழவைத்த தமிழர்களை வஞ்சிப்பவர் கருணாநிதி.

கச்சத்தீவை தாரை வார்த்தவர் கருணாநிதி. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தட்டிக் கேட்காதவர் கருணாநிதி. லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்து அவர்களை அழித்தவர் கருணாநிதி. நதிநீர்ப் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்தவர் கருணாநிதி. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர் கருணாநிதி. இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்தவர் கருணாநிதி. இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறார் கருணாநிதி.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ.1.80 லட்சம் கோடி ரூபாய். இந்த ஊழல் பணத்தை  முதலீடு செய்து அதன்மூலம் சம்பாதித்த பணம் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை வைத்து பெரம்பலூர் மாவட்டத்தில் 1000 ஏக்கருக்கும் மேலான நிலம் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவால் வாங்கப்பட்டது. யாரிடம் இருந்து வாங்கப்பட்டது தெரியுமா? ஏழை எளிய மக்களாகிய உங்களிடமிருந்து வாங்கப்பட்டது. ஒரு ஏக்கர் நிலம் 60 ஆயிரம் ரூபாய். இவ்வாறு வாங்கப்பட்ட நிலம் ஒரு சில மாதங்களில் பெரிய கம்பெனிகளுக்கு விற்கப்பட்டுவிட்டது. விற்கப்பட்ட விலை ஒரு ஏக்கர் 18 லட்சம் ரூபாய்.அதாவது ஆறு கோடி ரூபாய் கொடுத்து கொடுத்து ஏழை மக்களிடம் வாங்கப்பட்ட நிலம் 180 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கிறது. ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நிலம்வாங்கி விற்றதில் லாபம் 174 கோடி. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலைமைதான். இதன்மூலம் மட்டும் லட்சக்கணக்கான கோடி ரூபாயை கருணாநிதி குடும்பத்தினர் சுருட்டிவிட்டனர்.

ஒரு ஏக்கர் நிலத்தை வெறும் 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற ஏழை மக்களால் அந்த பணத்தை வைத்து ஒரு கிரவுண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. அந்த அளவுக்கு நிலத்தின் மதிப்பு உயர்ந்துவிட்டது. இதுதான் ஊழலின் உச்சக்கட்டம். இந்த விலையேற்றத்திற்கு கருணாநிதி குடும்பத்தினர்தான் காரணம். நிலத்தின் விலை மட்டுமல்ல. அனைத்துப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கும் கருணாநிதி குடும்பத்தினர்தான் காரணம். தற்போதைய விலைவாசி உயர்வு என்பது இயற்கையானது அல்லது. கருணாநிதி குடும்பத்தினரால் செயற்கையாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மணல் கொள்ளை தமிழகம் முழுவதும் அமோகமாக நடைபெற்றது. இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மணல் கொள்ளை மூலம் 50 ஆயிரம் கோடி, கிரானைட் கொள்ளை மூலம் ரூ.80 ஆயிரம் கோடி என கருணாநிதி குடும்பத்தினர் நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.

காலாவதியான மருந்து விநியோகம என பலவழிகளில் கருணாநிதி குடும்பத்திற்கு பணம் சென்று கொண்டே இருக்கிறது. அனைத்து அரசுத் திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. 1971 முதல் 1976ஆம் ஆண்டு வரை கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற வீராணம் ஊழலில் உயிரை மாய்த்துக் கொண்டவர் காண்ட்ராக்டர் சத்யநாராயணா ரெட்டி. 1989 முதல் 91ஆம் ஆண்டு வரை கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்த டி.ஜி.பி துரை மர்மமான முறையில் இறந்தார். 1996 முதல் 2001ம் ஆண்டுவரை கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மேம்பால ஊழலில் உயிரை மாய்த்துக் கொண்டவர் சென்னையைச் சேர்ந்த ரமேஷ். இந்த முறை ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக சாதிக் பாட்சாவின் உயிர் பறிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்படுமோ? கொள்ளையடிப்பது கருணாநிதி குடும்பம். பலியாவது உங்களில் ஒருவர். கபடநாடகங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி.

மத்திய அரசில் அங்கம் வகித்தும் அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப பிரச்சனைகளை தீர்க்க கருணாநிதிக்கு வக்கில்லை. காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தாரா கருணாநிதி? கர்நாடக அரசோ மேட்டூர் அணையில் நீர் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. கர்நாடக அரசின் இந்த செயலையும் தட்டிக் கேட்கவில்லை. இவற்றிற்கு காரணம் கர்நாடகத்திலிருந்து வரும் தன் குடும்ப வருமானம் பாதிக்கப்பட்டுவிடும் என்பதுதான். இப்படி தன் மக்களுக்காக உழைக்கின்ற கருணாநிதி ஆட்சி அதிகாரம் தன்னைவிட்டு போய்விடுமோ என்று தமிழக மக்களுக்காக உழைக்க தன்னை தேர்ந்தெடுக்குமாறும், தமிழ் னத்தை பாதுகாக்க தன்னை மீண்டும் தேர்ந்தெடுக்குமாறும் பேசிவருகிறார். ஊழல் செய்வதில் மட்டுமல்ல மக்களை ஏமாற்றுவதிலும் வல்லவர் கருணாநிதி.

கருணாநிதியை இப்படியே விட்டுவிட்டால் தமிழக மக்களை விரட்டிவிட்டு தமிழகத்தையே தன் குடும்ப வசம் ஆக்கிக் கொள்வார். உங்களை விரட்ட நினைக்கும் கருணாநிதியை நீங்கள் விரட்டி அடிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் அதற்கு ஒரே வழி தேர்தல்தான். இதைப் பயன்படுத்தி நீங்கள் கருணாநிதியை குடும்பத்தோடு அப்புறப்படுத்த வேண்டும். 

தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கை பாதுகாப்பாகவும், செழுமையாகவும், பிரகாசமாகவும் விளங்க அனைவரும் விழிப்புடனும், எழுச்சியுடனும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். ஜனநாயக கடமையை ஆற்றி தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் திருவாரூரில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். கூத்தாநல்லூர் தனித் தாலுகாவாக அறிவிக்கப்படும். அங்குதரைப்பாலம் அமைக்கப்படும். திருவாரூரில் பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படும். இந்தத் தேர்தலில் தி.மு.க வீழ்வது உறுதி. தேர்தலுக்கு முன்பே கருணாநிதி அ.தி.மு.கவிற்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டினார். ஆனால் அவை எடுபடவில்லை. ஆட்சியை தக்க வைப்பதற்காக சதித் திட்டங்களை தீட்டினார். உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் அனுமதியாகி அனுதாபத்தைப் பெறவும், அந்த  அனுதாபம் வெற்றி பெறவில்லை என்றால் வன்முறையை கட்டவிழ்த்துவிட சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. 

தி.மு.க.வின் வன்முறைக்கு இடம் கொடுக்காமல் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்