முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வுக்கு தலைவர்கள் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.25 - பெட்ரோல் விலை ஒரே நாளில் ரூ.7.50 உயர்த்திய மத்திய அரசுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை ஒரே நாளில் ரூ.7.50 அளவிற்கு உயர்த்திய மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ந.சேதுராமன்:-

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனத்தலைவர் டாக்டர் ந.சேதுராமன் விடுத்துள்ள அறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலையேற்றத்தை அறிவித்துள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த மோசமான நடவடிக்கைக்கு மத்திய அரசே காரணம். பெட்ரோலிய துறையில்  நடமாடிக் கொண்டிருக்கிற  ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால் பல்வேறு உண்மைகள்  வெளிப்படும் என்று கூறியுள்ளார்.

வைகோ:-

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணம் காட்டி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தி இருப்பது பகல் கொள்ளை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார கொள்கைகள் தான் பணவீக்கத்துக்கும், ரூபாய் மதிப்பு சரிவதற்கும் காரணம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதார கொள்கைகள்தான், பணவீக்கத்துக்கும், ரூபாய் மதிப்பு சரிவதற்கும் காரணம் ஆகும்.
பெட்ரோல் விற்பனை மூலம் எண்ணெய் நிறுவனங்கள் மார்ச் மாதம் வரை 4,860 கோடி ரூபாய் நட்டம் அடைந்து உள்ளது என பெட்ரோலிய அமைச்சர் தெரிவித்து உள்ளார். 2011​2012 ஆம் ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஈட்டுத் தொகையாக 38,500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்து இருக்கின்ற நிலையில், இப்போது பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசு கூறும் காரணம் ஏற்கத்தக்கது அல்ல.
கடந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. நாட்டின் பண வீக்கம் 7.23 சதவிகிதமாகவும், உணவு பணவீக்கம் 10.49 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ள நிலையில் பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால், விலைவாசி கடுமையாக உயரும். அது அடித்தட்டு மக்களுக்குப் பெரும் சுமையாக விழும் என்பதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.
இதற்கு மத்திய அரசு பொறுப்பு அல்ல என்றும், எண்ணெய் நிறுவனங்கள்தான் இதற்குப் பொறுப்பு என்றும் நாட்டு மக்கள் அனைவரும் ஏதும் அறியாதவர்கள் என்று கருதிக்கொண்டு, ஏமாளிகள் ஆக்க, இந்த அரசை நடத்துவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியா? கொள்ளையடிக்கும் எண்ணெய் நிறுவனங்களா? என்று கேள்வி எழுகிறது. இந்த விலை உயர்வினால், மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும் நடுத்தர மக்கள், ஆட்டோ ஓட்டும் அடித்தட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மொத்த விலை உயர்வு நடுத்தர மக்களையும், அடித்தட்டு மக்களையும் வாட்டி வதைக்கும்.
மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதுடன், பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று வைகே கேட்டுக்கொண்டுள்ளார்.

விஜயகாந்த்:-

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசு பதவி ஏற்று மூன்று ஆண்டு காலத்தில் 16 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியதன் காரணமாக சுமார் 44 ரூபாய் இருந்த பெட்ரோல் விலை, இன்று 79 ரூபாய் என்ற அளவில் சுமார் 80 சதவீதம் உயர்ந்து உள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெறுகின்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும், எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி அளித்து விட்டு, எண்ணெய் நிறுவனங்கள் தான் பெட்ரோல் விலையை உயர்த்தியது என்று பொது மக்களின் காதில் null சுற்றுகின்ற மத்திய அரசு, வரலாறு காணாத அளவில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.7.50 என அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு தேமுதிக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ராமதாஸ்:-

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் ஏற்கனவே பெரும் அவதிப்பட்டு வரும் நிலையில் பெட்ரோல் விலை இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டு இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
பெட்ரோல் விலை உயர்வால் பிற பொருட்களின் விலையும் சங்கிலி தொடர் போல அதிகரிக்கும். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!