முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது: கலெக்டர்

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      தமிழகம்
Image Unavailable

நெல்லை, மே 25  - திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் தென்காசி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.செல்வராஜ், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம், குமாரசாமிபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட காப்பகத்தில் நடைபெற்று வரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.  பின்னர், அம்பாசமுத்திரம் அரசு தலைமை மருத்துவ மனையில் டெங்கு காய்ச்சலுக்காக அளிக்கப்படும் சிகிச்சைகள் தரமுள்ளதாக இருக்கிறதா எனவும், உரிய மருந்துகள் இருப்பில் உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்கள்.  அதனைத் தொடர்ந்து விக்கிரமசிங்கபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வினை மேற்கொண்டு, நகராட்சிப் பகுதிகளில் வீடு, வீடாக சென்று, மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-
மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 70 கொசு ஒழிப்பு பணியாளர்கள் என 1330 பேர் கொசு ஒழிப்பு ்ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.  340 கொசு ஒழிப்பு புகை அடிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  வீடுகளில் தண்ணீர் தேங்கும் இடங்களிலும், தண்ணீர் தொட்டிகளிலும் அபேட் கரைசலை தெளிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியையும், கொசு ஒழிப்பு பணியையும் முழுமையாக ஒழிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் செயல்பட்டு, டெங்கு காய்ச்சலை முழுமையாக தடுக்கலாம். தென்காசி மருத்துவமனையில் (22.5.12) 20 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால்,  (23.5.2012) 8 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். இப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பணியாளர்கள் முழு வீச்சில் பணி மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இதுகுறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.செல்வராஜ், தெரிவித்தார்.
ஆய்வின்போது, நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர் த.மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.கொ.அ.மீராமுகைதீன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.மதிமாறன், நகராட்சி ஆணையர் ரெங்கசாமி, இ.மனோன்மணி, நகராட்சிகளின் செயற்பொறியாளர் கனகராஜ் உள்பட சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்