முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் போர்க்கொடி

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மே. 25 - பெட்ரோல் விலை உயர்வு நியாயமற்றது. அதை திரும்ப பெறாவிட்டால் நாடு தழுவிய அளவில் அரசியல் ரீதியான போராட்டம் நடைபெறும் என்று பா.ஜ.க. எச்சரித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர், பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கிறோம். இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விலையை உயர்த்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவோம் என்றார். இந்த விலையேற்றத்தை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக கட்சியின் அனைத்து பொதுச் செயலர்களும் கூடி ஆலோசனை நடத்தவிருக்கிறார்கள் என்றார்.
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி சரியாக கையாளவில்லை. பெட்ரோல் விலை உயர்வு மூலம் மக்களை அரசு துயரத்தில் தள்ளி விட்டது. உணவு தொடர்பான மற்றும் பொது பொருளாதார நடவடிக்கைகளை முறையாக நிர்வகிக்காததால்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்திருக்கிறது என்று அக்கட்சியின் மற்றொரு செய்தி தொடர்பாளரான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலரான டி. ராஜா கூறுகையில்,
மக்களுக்கு எதிரான வகையில் செயல்படுவதை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் தெருத்தெருவாக போராட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். பெட்ரோல் விலை உயர்வு நாட்டின் சாதாரண மக்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி வழங்கியிருக்கும் பரிசு என்று சமாஜ்வாடி கட்சி விமர்சித்திருக்கிறது. இது மக்கள் விரோத நடவடிக்கை. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மூன்றாண்டு நிறைவில் பொதுமக்களுக்கு இந்த பரிசை அரசு வழங்கியிருக்கிறது என்று அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வு நியாயமற்றது என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது பற்றி மத்திய அரசு எங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கேரளத்தில் கடையடைப்பு நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல் விலையேற்ற நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கோ மத்திய அரசுக்கோ எந்த தொடர்பும் இல்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப இந்தியாவில் உள்ள அரசு எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன. உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால் சர்வதேச அளவில் எதிர்கொள்ளப்படும் விளைவுகளை நம் நாடும் எதிர்கொண்டு வருகிறது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரஷீத் ஆல்வி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்