முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தா.பாண்டியன் கூட்டத்தை தடுத்த போலீசார் தோல்வி பயத்தில் கருணாநிதி சி.பி.ஐ. குற்றச்சாட்டு

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

அம்பத்தூர், மார்ச்.- 30 - அம்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வேதாச்சலத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சி.பி.ஐ.) மாநில செயலாளர்  தா.பாண்டியன்  பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்ய முறைப்படி தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தும் அதனை போலீசார் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்திவிட்டனர். தோல்வி பயத்தால் கருணாநிதி போலீசை வைத்து இப்படி செய்கிறார் என்று சி.பி.ஐ. கட்சியின் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு: அம்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக வேதாச்சலம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கடந்த 2 நாட்களுக்கு முன் தே.மு.தி.க. தலைவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்தார். இதேபோன்று நேற்று இரவு அம்ப்ததூர்  பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அ.தி.மு.க.  வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம் நடத்த அ.தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரியும், நகராட்சி ஆணையருமான மகேஸ்வரியிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து அனுமதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது. 

எனவே நேற்று இரவு  பழைய  பேருந்து நிலையம் அருகே மேடை அமைத்து சாலையில் பிரச்சார கொடி, ஒலி பெருக்கி என அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, மாலை 6.00 மணியளவில் கூட்டம் தொடங்க சில நிமிடங்களில் அம்பத்தூர் காவல் நிலையை போலீசார் கூட்டத்திற்கு அனுமதி இல்லை. உடனே மேடையை  அகற்றி, ஒலி பெருக்கி ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர். 

இதனால் கொதிப்படைந்த அ.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சியினர் போலீசாரிடம் நாங்கள் முறையாக அனுமதி பெற்றுதான் கூட்டம் போடுகிறோம். அனுமதி அளித்துவிட்டு திடீரென கூட்டத்தை  கலையுங்கள் என்றால் என்ன அர்த்தம்? அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து வந்ததை நீங்கள் பார்த்து கொண்டே இருந்துவிட்டு, கூட்டம் தொடங்கும் போது ஏன்? அனுமதி இல்லை என்று சொல்கிறீர்கள்? நாங்கள் இங்கு தான் கூட்டம் நடத்துவோம் என்று ஆவேசமாக பேசினார்கள். அதற்கு காவல் துறையினர்  அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தினால் கைது செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறுகையில்,

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் அமைந்த கூட்டணியில் அ.தி.மு.க. வேட்பாளர் வேதாச்சலத்தை ஆதரித்து எங்கள் கட்சி மாநில தலைவர் தா.பாண்டியன் இன்று அம்பத்தூரில் பிரச்சாரம் செய்ய அனைத்து ஏற்பாடுகலையும் செய்து முடிக்கின்ற வேலையில் திடீரென போலீசார் கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர். நாங்கள் முறையாக அனுமதி வாங்கிதான் கூட்டம் நடத்துகிறோம். ஆனால் தி.மு.க. கூட்டணி கட்சியின் இன்று அம்பத்தூரில் எந்த அனுமதியும் வாங்காமல் பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். கருணாநிதிக்கு தோல்விபயம் வந்துவிட்டது. அதனால்தான் எங்கள் கட்சி தலைவர் தா.பாண்டியன் இங்கே அவரை பற்றி பிரச்சாரம் செய்து விடுவாரே என்ற பயத்தில் காவல் துறையை தூண்டுவிட்டு, கூட்டத்தை நிறுத்திவிட்டனர்.

தேர்தல் தேதி அறிவித்த சில தினங்களில் தேர்தல் அதிகாரி மகேஸ்வரி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானம், மாநில தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வரும்போது தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்க வேண்டும் என்பது. ஆனால் நாங்கள் முறையாக அனுமதி வாங்கினோம். திடீரென காவல் துறையினர் கூட்டம் நடத்த அனுமதி மறுத்துவிட்டு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்றனர். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட தகவல் தா.பாண்டியனுக்கு தெரிவிக்கப்பட்டதும், பிரச்சாரத்துக்கு வந்த அவர் பாதியிலேயே திரும்பி சென்றார்.

பேட்டியின்போது முன்னாள் நகர்மன்ற தலைவர் ருக்மாங்கதன், பார்த்திபன், அய்யனார், முகப்பேர் பாலன், டன்லப் வேலன், லஷ்மிபதி, கோதண்டம், அரிகிருஷ்ணன், வட்ட செயலாளர் முகுந்தன், கே.ஜி.மது, குட்டி, மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மாரியப்பன், சி.பி.எம். லெனின் சுந்தர் தே.மு.தி.க. ஆறுமுகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்