முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஸ் வீரர் விசுவநாதன் ஆனந்துக்கு முதல்வர் வாழ்த்து

வியாழக்கிழமை, 31 மே 2012      விளையாட்டு
Image Unavailable

சென்னை, ஜூன்.1 - ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள தமிழக வீரர் விசுவநாதன் ஆனந்துக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் கடந்த மே 11-ம் தேதி துவங்கியது. 12 சுற்று ஆட்டங்கள் கொண்ட இப்போட்டியில் இந்திய செஸ் வீரரும், நடப்பு உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்தும் இஸ்ரேலைச் சேர்ந்த போரிஸ் கெல்பாண்டும் விளையாடினர். இப்போட்டியில் நடைபெற்ற முதல் ஆறு சுற்றுப் போட்டிகளும் டிராவில் முடிவடைந்தன.

7​வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார். எட்டாவது சுற்று ஆட்டத்தில் சுதாரித்துக் கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் கெல்பாண்டை வீழ்த்தி இப்போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருந்தார். இதனையடுத்து நடைபெற்ற 9, 10, 11, 12 ​வது சுற்று ஆட்டங்கள் டிரா ஆகின. இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இந்த கடைசி சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்ததால்  டை பிரேக்கிங் ஆட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிவேக ரேபிட் முறையில் 4 ஆட்டங்கள் நடக்கும். ஒவ்வொரு வீரருக்கும் 25 நிமிடங்கள் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு காய் நகர்த்தலுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் அளிக்கப்படும்.

ரேபிட் முறையின் முதல் ஆட்டம் 32 ​வது நகர்த்தலில் டிரா ஆனது. ரேபிட் முறையின் இரண்டாவது ஆட்டத்தில் அதிவேகமாக விளையாடிய விஸ்வநாதன் ஆனந்த் 77-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மூன்றாவது ஆட்டத்தில் இருவரும் திறமையாக ஆடியதால் 35-வது நகர்த்தலில் டிரா ஆனது. இதனையடுத்து நடைபெற்ற ரேபிட் முறையின் நான்காவது சுற்று ஆட்டத்தில் அதிவேக ஆட்டத்தை வெளிப்படுத்திய விஸ்வநாதன் ஆனந்த் 56 வது நகர்த்தலில் ஆட்டத்தை டிராவில் முடித்தார். இதன் மூலம் ரேபிட் முறை ஆட்டங்களில் 2. 1/2 ​ 11/2 என்ற கணக்கில் கெல்பாண்டை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த் 5 ​வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி நடப்புச் சாம்பியன் பட்டத்தையும் தக்கவைத்துக் கொண்டார்.

கடந்த 2000, 2007, 2008 மற்றும் 2010  என நான்கு முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஜெயலலிதா பாராட்டு: 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆனந்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விசுவநாதன் ஆனந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

5-வது முறையாகவும், தொடர்ந்து 4-வது முறையாகவும் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை nullநீங்கள் வென்றிருக்கிறீர்கள். என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். பரபரப்பு நிறைந்த அதிவேக ராபிட் சுற்று டை பிரேக்கர் போட்டிக்கு பிறகு உங்கள் திறமையை நிரூபித்து இந்த பட்டத்தை nullநீங்கள் வென்றிருக்கிறீர்கள். இதன் மூலம் இந்தியா மற்றும் தமிழகத்திற்கு nullநீங்கள் பெருமை தேடித் தந்துள்ளீர்கள்.

இந்த மகத்தான வெற்றிக்காக உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல ஆண்டுகளுக்கு இந்த பட்டத்தை nullங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென வாழ்த்துகிறேன்.  கடவுள்  உங்களை ஆசீர்வதிக்கட்டும். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா  கூறியுள்ளார்.

வாழ்த்துக்கள் குவிகிறது: உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.

பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உங்களது இந்த மிகப்பெரிய சாதனையின் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்து இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஆனந்த் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

தமிழக கவர்னர் ரோசைய்யா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 5​வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் நம் நாடும், நாட்டு மக்களும் பெருமைப்பட வைத்திருக்கிறீர்கள். தொடர்ந்து பல சாதனைகள் பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய்மக்கான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஆனந்த் இந்த நாட்டின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர். அவர் மீண்டும் தனது சாதனையை நிலை நிறுத்தி இருக்கிறார் என்றார்.

ஆனந்த்தின் சிறந்த முயற்சியால் இந்த சாதனை படைக்க முடிந்ததாக இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா வாழ்த்தியுள்ளார். இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் சூர்ய சேகர் கங்குலி கூறுகையில், 180 நாடுகள் பங்கேற்கும் செஸ் விளையாட்டில் ரஷியா தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதை ஆனந்த் முறியடித்து விளையாட்டு உலகின் முடிசூடா மன்னாக திகழ்கிறார் என்றார்.

ஆனந்த்துக்கு பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் உள்பட பல்வேறு மாநில முதல்​அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலக சாதனை படைத்த ஆனந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று இந்திய செஸ் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் கூறும்போது, தெண்டுல்கர் வரவால் கிரிக்கெட் தான் இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டாக இருக்கிறது. அதே சமயம் ஆனந்த் உலக அளவில் நம் நாட்டின் புகழை நிலைநிறுத்தி உள்ளார். ஆனந்த் 5 முறை இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுக்கொடுத்துள்ளார் அவரது சாதனையால் இந்தியர்ளாகிய நாம் பெருமைப்படுகிறோம். தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார்கள். இப்போதைய நிலையில் பாரத ரத்னா விருதுக்கு ஆனந்த் தான் தகுதியானவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க சிபாரிசு செய்ய வேண்டும் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!