முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மின்வெட்டு நேரம் குறைப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.2 - தமிழகத்தில் மின் உற்பத்தி சீரானதையடுத்த வாரம் ஒருநாள் மின் விடுமுறை மற்றும் கட்டாய மின் விடுமுறையும், தமிழகம் முழுவதும் நான்கு மணி நேரமாக இருக்கும் மின் வெட்டு 3 மணி நேரமாகவும், சென்னையில் 2 மணி நேரமாக இருக்கும் மின்வெட்டு 1 மணி நேரமாகவும் குறைக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் நேற்று மின் நிலைமை குறித்த ஆய்வுக் குழுக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. இதில் மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி  மற்றும் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் உட்பட உயரதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:-

தமிழ்நாட்டின் மின் நிலைமை குறித்து நேற்று (1.6.2012) எனது தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறையை படிப்படியாக குறைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.  கடந்த சில வாரங்களாக காற்றாலைகளின் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைப்பதன் காரணமாக, தமிழ்நாட்டின் மின் நிலைமை தற்போது கணிசமான அளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது.  இது மட்டுமல்லாமல், 10.5.2012 அன்று தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டதையடுத்து, நேற்று முதல் மீண்டும் மேட்டூர் அனல் மின் நிலையம் தனது முழு உற்பத்தித் திறனான 840 மெகாவாட் மின் உற்பத்தியை செய்யத் தொடங்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இன்று முதல் (2.6.2012) தளர்த்த இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, உயர் அழுத்த மற்றும் குறைந்த அழுத்த தொழிற்சாலைகளுக்கான வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கட்டாய மின்சார விடுமுறை ஆகியவை முற்றிலுமாக நீக்கப்படும் என்பதையும்; தற்போது சென்னையில் வீட்டு பயனீட்டாளர்களுக்கான மின் வெட்டு இரண்டு மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாகவும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நான்கு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாகவும் குறைக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  தற்போது பணிகள் நடைபெற்று வரும் அனல் மின் நிலையத் திட்டங்கள் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் ஆகியவை விரைவில் செயல்படத் துவங்கும்.  எனவே, தற்போதுள்ள மின் கட்டுப்பாடுகள் படிப்படியாக விரைந்து தளர்த்தப்படும்.  அவை குறித்து மீண்டும் அடுத்த மாதம் ஆய்வு நடத்தப்பட்டு தக்க முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்