முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களை தாக்கிய தி.மு.க. எம்.பி. ரித்தீஷோ மதுரை சிறையில்

புதன்கிழமை, 30 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

ராமநாதபுரம்,மார்ச்.- 30 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சுருட்டியதாக கூறப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவோ டெல்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேசமயத்தில் மக்களை தாக்கிய தி.மு.க. எம்.பி. ரித்தீஷ் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ரித்தீஷூடன் சேர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 50 பேர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை சட்டமன்ற தொகுதியில் உள்ள பீக்கங்குறிச்சி என்ற கிராமத்தில் தி.மு.க. அரசு தங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செயது தரவில்லை  என்பதால் தி.மு.க. வேட்பாளர் சு.ப.தங்கவேலன் வாக்கு சேகரிக்க வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் ஊருக்குள் வரக்கூடாது என்பதற்காக ஊருக்குள் செல்லும் சாலையை துண்டித்தனர். வாக்கு சேகரிப்பதற்காக வந்த வேட்பாளர் அமைச்சர் சுப.தங்கவேலன் ஊருக்குள் நுழைய முடியாமல் திரும்பிச்சென்றார். இந்த தகவலை அறிந்து ஆத்திரமடைந்த ராமநாதபுரம் தொகுதி தி.மு.க. எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் தனது அடியாட்களுடன் சென்று அந்த கிராமத்து வாக்காளர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பொதுமக்கள் ஓட ஓட விரட்டப்பட்டனர்.

 பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. எம்.பி. மற்றும் ரவுடி மீது கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோழந்தூர் மெயின் ரோட்டில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆனந்த் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கலவர பகுதியில் இருந்து தப்பிச்சென்ற தி.மு.க. எம்.பி.யின் காரை போலீசார் விரட்டிப்பிடித்து ரித்தீஷ் எம்.பி.யை கைது செய்தனர். இந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட பேர் படுகாயம் அடைந்தனர். நாராயணன் என்பவர் மிகவும் படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருலா, அ.தி.மு.க. நிர்வாகிகள் அன்வர் ராஜா, ஆனிமுத்து, முனியசாமி, சேகர் முருகேசன், தே.மு.தி.க. முஜிபுர்ரகுமான்,உட்பட கூட்டணி கட்சியினர் பார்த்து ஆறுதல் கூறினர். கைது செய்யப்பட்ட தி.மு.க. எம்.பி.ரித்தீஷ் மற்றும் அவரது அடியாட்கள் டூயட் பாபு, நாகநாத சேதுபதி, தினேஷ் குமார், பாலகிருஷ்ணன், பூமிநாதன், ஆகியோரை ராமநாதபுரம் ஜே.எம்.2 நீதிபதி பாஸ்கரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர், அனைவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக கலவரத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தி.மு.க. எம்.பி., நித்தீஷ் மீது பொதுமக்களை தாக்கி காயப்படுத்தியது, அவதூறாக அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் வன்கொடுமை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட தி.மு.க. எம்.பி.ரித்தீஷை சிறையில் அடைக்காமல் ராமநாதபுரம் மருத்துவமனையில் தங்கவைக்க அவரை சேர்ந்தோர் திட்டமிட்டு காயை நகர்த்தினர். ஆனால் தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி போடுவதால் காவல்துறை உயரதிகாரிகள் இரவோடு இரவாக கொண்டு வந்து அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்ட தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா,சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஒரு பக்கம் கம்பிகளை எண்ணிக்கொண்டியிருக்கும் நிலையில் பொதுமக்களை தரக்குறைவாக பேசி தாக்கிய தி.மு.க. எம்.பி. ரித்தீஷ், தேர்தல் ஆணையத்தின் கிடுக்குப்பிடி காரணமாக போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பதோடு அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு கம்பியை எண்ணிக்கொண்டியிருக்கிறார். அரசனாலும் சரி ஆண்டியானாலும் சரி சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் என்பதை தேர்தல் ஆணையம் நிரூபித்து வருகிறது. சபாஷ்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்