முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே - ராம்தேவ் இன்று டெல்லியில் உண்ணாவிரதம்

சனிக்கிழமை, 2 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

 

பிரசாரத்தை தொடங்கும் வகையில் ஊழல் மற்றும் கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவரக்கோரி அண்ணா ஹசாரேயும் சுவாமி ராம்தேவும் ஒரு மேடையில் இன்று டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஊழலை எதிர்த்து அண்ணா ஹசாரேயும் அவரது குழுவினரும் ஊழலுக்கு எதிராக போராடி வருகிறார்கள். மேலும் சுவாமி ராம்தேவும் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். முதலில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். மறுபக்கம் சுவாமி ராம்தேவ் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். பின்னர் நாட்டில் ஊழை ஒழிக்கவும் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை வெளிக்கொணரவும் ஹசாரேயும் ராம்தேவும் சேர்ந்து போராடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஹசாரே குழுவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு பிளவும் ஏற்பட்டது. ராம் தேவ் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. அதனால் அவருடன் சேர்ந்து போராட்டம் நடத்தக்கூடாது என்று ஹசாரே குழுவில் உள்ள ஒரு சிலர் கூறினர். இதனால் கடந்த ஒருவருட காலமாக ஊழலை எதிர்த்து இருவரும் சேர்ந்து போராடாமல் இருந்தனர். 

இந்தநிலையில் ஹசாரே குழுவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஊழல் மற்றும் வெளிநாடுகளில் இந்திய முதலாளிகள், பணத்தை பதுக்கி வைத்திருப்பதை நாட்டுக்கு கொண்டு வரக்கோரியும் ஹசாரேயும் யோகா குரு ராம்தேவும் சேர்ந்து இன்று டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஒரே மேடையில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இது மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாகும். மேலும் உண்ணாவிரத மேடையில் வருகின்ற 2014-ம் ஆண்டு நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய யுக்தி குறித்து சுவாமி ராம்தேவ் அறிவிப்பு வெளியிடலாம் என்று தெரிகிறது. இந்த ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஹசாரே குழுவில் உள்ள அரவிந்த் ஹெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கோபால் ராய், ஆகியோரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. மேலும் பிரச்சினைக்குரிய ஓய்வு பெற்ற ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங்கும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வார் என்று தெரிகிறது. 

மத்திய அரசில் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று பிரதமர் மன்மோகன் சிங் மீது ஹசாரே குற்றஞ்சாட்டி உள்ளார். மன்மோகன் சிங் மீது ராம்தேவும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். மன்மோகன் சிங்கிற்கு அரசியலில் கண்ணியம், கெளரவம் இல்லை என்று ராம்தேவ் கூறியுள்ளார். உண்ணாவிரதத்தை தொடங்குவதற்கு முன்பு இரு பிரிவை சேர்ந்தவர்களும் ஆதரவாளர்களும் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்கள். உண்ணாவிரதத்தையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 20 கம்பெனி இணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்